வியாழன், 5 நவம்பர், 2009

ஸ்ரீவை.,யில் பலமாத காலமாக பூட்டிகிடக்கும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட விளையாட்டு உபகரணங்கள்

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உபயோகமில்லாமல் பூட்டிகிடக்கும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட விளையாட்டு உபகரணங்கள் அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் பாழாகி வருகிறது என இளைஞர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

நல்ல உடல்கட்டுள்ள இளைஞர்களை உருவாக்கவும் உலக அரங்கில் விளையாட்டில் பின்தங்கி இருக்கும் இந்தியாவை முன்னேற்றுவதற்காக தமிழக அரசு அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் கிராமபுற மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் விளையாட்டு உபகரணங்கள், ஜிம் உபகரணங்கள் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வழங்கி வருகிறது.

இத்தகைய உபகரணங்கள் பெரும்பாலும் அந்தந்த பஞ்.,அலுவலகங்களின் பழைய பேப்பர் வைக்கும் கிடங்குகளில் தான் முடங்கி கிடக்கிறது. இதனால் கிராமபுற இளைஞர்களுக்கு இதன் பயன்பாடே இல்லாமல் போகிறது.

முன்பெல்லாம் கிராமங்களில் கிட்டிபுளி, கோலிகுண்டு, பம்பரம், கிளியாந்தட்டு போன்றவைகளும் கபடி, கோ-கோ, மல்யுத்தம், உரியடி, வழுக்குமரம் போன்ற வீரவிளையாட்டுகளும் அவ்வப்போது நடந்து வந்தது.

ஆனால் காலமாற்றங்களுக்கேற்ப நாகரிகங்களின் வளர்ச்சி ஆக்கிரமிப்பு செய்ததன் காரணமாக கிரிக்கெட், ஹாக்கி, புட்பால், வாலிபால் போன்ற தேசிய விளையாட்டுக்கள் கிராமபுறத்தை ஆக்கிரமிப்பு செய்ய துவங்கி உள்ளது.
ஆனால் அதற்கான இடவசதியும், உபகரணங்களும் போதிய அளவும் போதிய பயிற்சியும் கிடைக்காததால் இவர்களுக்கு சரியான பயிற்சியும் முயற்சியும் கிடைப்பது இல்லை.

இதனை புரிந்த தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிராமபுறங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையான உபகரணங்களை அவரவர் தகுதிக்கு ஏற்ப இடவசதிக்கேற்ப வழங்கி வருகிறது.

இதன்படி ஸ்ரீவைகுண்டம் பஞ்.,யூனியனுக்குட்பட்ட ஸ்ரீபராங்குசநல்லூர் ஊராட்சியில் விளையாட்டு தளம் அமைப்பதற்கு பஞ்.,எல்லைக்குட்பட்ட பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்து சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் மதிப்புள்ள விளையாட்டு உபகரணங்கள் வந்தும் அது உபயோகபடாமல் ஒரு மூலையில் முடங்கி கிடப்பதால் யாருக்கு என்ன லாபம்.
இதுகுறித்து யூனியன் நிர்வாகம், மாவட்ட திட்ட இயக்குனர் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல் ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்.,குட்பட்ட பகுதிகளில் விளையாட்டு உபகரணங்கள் வந்தும் மூலையில் முடங்கி கிடக்கிறது. முடங்கி கிடக்கும் விளையாட்டு உபகரணங்கள், இதுபோல் எத்தனை பஞ்.,களில் டவுன் பஞ்.,களில் மூலையில் முடங்கி கிடக்கிறதோ தெரியவில்லை.
அரசின் இது போன்ற திட்டங்கள் மாணவர்களுக்கோ, இளைஞர்களுக்கோ போய் சேராமல் மூலையில் முடங்கி கிடப்பதால் யாருக்கு என்ன லாபம். எதிர்காலம் இவர்கள் கையில் என்று மார்தட்டி பேசும் மேடை பேச்சுகள் இதில் அடிபட்டு போய்விட்டது.

அரசின் லட்சக்கணக்கான பணம் இவ்வாறு வீணாகுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் திட்ட இயக்குனர் ஆகியோர் நடவடிக்கை எடுப்பார்களா? உரிய விளையாட்டு உபகரணங்கள் போதிய அளவில் உரிய இடத்திற்கு சென்றடைந்து இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பயன்படுமா? என்பதுதான் கேள்வி, பதில் வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்தி: தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin