ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
புதன், 4 நவம்பர், 2009
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தயாரித்துள்ள அரபி பேசும் ரோபோட்
ரஜினிகாந்த்தை வைத்து தமிழ் மற்றும் இந்தியில் ரோபோட்டைத் தயாரித்து வருகிறார் நம்மூர் ஷங்கர். இந்த நிலையில் உலகின் முதலாவது அரபி பேசும் ரோபோட்டை தயாரித்துள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
விரைவில் இந்த ரோபோட் பெருமளவில் வணிக ரீதியில்த யாரிக்கப்பட்டு ஷாப்பிங் வளாகங்களில் பணிக்கு களம் இறக்கப்படவுள்ளதாம்.
அபுதாபியின், அல் ஐய்ன் நகரில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து இந்த ரோபோட்டை உருவாக்கியுள்ளனர். தங்களது பல்கலைக்கழக ஆய்வகத்திலேயே இதை தயாரித்துள்ளனர்.
உலகின் முதலாவது அரபி பேசும் ரோபோட் இதுதான். இந்த ஆய்வகத்தின் இயக்குநரும், கிரேக்க நாட்டு கம்ப்யூட்டர் அறிவியல் உதவிப் பேராசிரியருமான நிக்கோலஸ் மாவ்ரைட்ஸ் இதற்கு உதவி புரிந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த ரோபோட் பார்க்க நிஜமான மனிதனைப் போலவே இருக்கும். இஸ்லாமிய தத்துவஞானியான இபின் சினாவின் பெயரை இதற்கு சூட்டியுள்ளோம். இவர் ஒரு மாபெரும் விஞ்ஞானியும் ஆவார். ஆங்கிலத்தில் இவர் அவிசென்னா என அறியப்படுகிறார்.
இந்த ரோபோட்டை சேல்ஸ்மேன், வரவேற்பாளர், ஷாப்பிங் வளாக உதவியாளர் என பல பணிகளுக்கும் பயன்படுத்த முடியும்.
கேள்விகள் கேட்டால் இந்த ரோபோட் பதிலளிக்கும். இன்டர்நெட் கனக்ட் செய்து கொடுக்கும். தகவல்கள் கேட்டால் கொடுக்கும். நீங்கள் வாங்க விரும்பும் பொருட்களை கம்ப்யூட்டர் மானிட்டரில் பார்த்து தேர்வு செய்து சொல்லும்.
இன்னும் ஆறு மாதங்களில் இந்த ரோபோட்டை முழு அளவில் செயல்படக் கூடியதாக தயார் செய்ய முடியும்.
தற்போது இந்த ரோபோட்டை சோதனை ரீதியாக அல் ஐய்ன் வணிக வளாகத்தில் ஒரு நாள் முழுவதும் பணியில் ஈடுபடுத்தியுள்ளோம் என்றார்.
நிக்கோலஸ் தலைமையிலான ஆய்வுக் குழுவில் 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.
அரேபியர்கள் அணிவதைப் போன்ற வெள்ளை நிற உடை, தலையில் தங்க நிறத்திலான வளையம், டர்பன், தாடி ஆகியவற்றுடன் பக்கா அரபித் தோற்றத்தில் உள்ளது இந்த ரோபோட்.
இபின் சினாவைப் போலவே இந்த ரோபோட்டை வடிவமைத்துள்ளனராம். இபின் சினா, உஸ்பெகிஸ்தானில் உள்ள புகாரா என்ற நகரில் பிறந்தவர் ஆவார்.
இந்த ரோபோட்டிடம் கேள்விகள் கேட்டால், மனிதனின் முக அசைவுகளுடன் பதில் சொல்கிறது.
முக அசைவுகள் உள்ளிட்டவற்றை இந்த ரோபோட்டில் கொண்டு வர ஹான்சன் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் உதவியுள்ளது. ஆனால் இதற்கான சாப்ட்வேரை நிக்கோலஸ் தலைமையிலான குழுவினரே வடிவமைத்துள்ளனர்.
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக பணியாற்றி இந்த ரோபோட்டையும், அதற்குத் தேவையான சாப்ட்வேர்களையும் இவர்கள் வடிவமைத்துள்ளனர்.
பார்க்க, முக பாவனைகளை கொண்டு வர, உணர, பதிலளிக்க உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் தனித் தனியாக சாப்ட்வேரை வடிவமைத்துள்ளனர்.
இந்த ரோபோட் குறித்து தகவல் அறிந்ததும் ஏராளமான பேர் தங்களுக்கு வேண்டும் என ஆர்டர் கொடுக்க ஆரம்பித்து விட்டனராம்.
இந்த ரோபோட்டை உருவாக்க 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இதை விரைவில் வணிக ரீதியில் தயாரிக்கவும் திட்டமிட்டு வருகின்றனராம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக