புதன், 11 நவம்பர், 2009

லண்டனில் 6 இந்திய முஸ்லீம் மாணவர்கள் மீது தாக்குதல்

வடக்கு லண்டனில் உள்ள இஸ்லாமிய கழக பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 6 இந்திய மாணவர்கள், ஒரு கும்பலால் கொலை வெறித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

30க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பலின் இந்தத் தாக்குதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைப் பிடிக்க லண்டன் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

இதுதவிர மேலும் 3 பேருக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது. பல்கலைக்கழக வளாகம் அருகே சம்பந்தப்பட்ட இந்திய மாணவர்கள் வந்து கொண்டிருந்தபோது அங்கு 30க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் வந்து அவர்களை தடுத்து நிறுத்தியது. பின்னர் அவர்களை இரும்புக் கம்பி, செங்கல், கம்புகளால் சரமாரியாகத் தாக்கினர். இனவெறியுடன் கோஷமும் போட்டபடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அவர்களைத் தடுக்க 2 மாணவர்களும், இன்னொருவரும் முயன்றபோது அவர்களுக்கு கத்திக் குத்து விழுந்துள்ளது.

கடந்த வாரம் இப்பல்கலைக்கழக மாணவர் ஒருவரைப் பார்த்து ஒரு கும்பல், இஸ்லாமை கேலி செய்து கிண்டலடித்து வம்புக்கு இழுத்துள்ளது. அவரைத் தொழுகைகக்குப் போக விடாமல் ரகளையும் செய்துள்ளனர். அதன் பின்னர் அந்த மாணவரைத் தாக்கியுள்ளனர். இருப்பினும் சக மாணவர்கள் குறுக்கிட்டு அந்தக் கும்பலைத் தடுத்து பிரித்து விட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் ஒரு மாணவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது பெரும் கும்பலாக வந்து இந்திய முஸ்லீம் மாணவர்களைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இதுகுறித்து இஸ்லாமிய மாணவர் கழகங்களின் சம்மேளன நிர்வாகிகள் கூறுகையில், முஸ்லீம்களே ஓடி விடுங்கள், பாக்கிஸ் என்று கூறி அவர்கள் தாக்கியுள்ளனர்.

இங்கு படிக்கும் ஆசிய மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அது கோரியுள்ளது.

அமைப்பின் செய்தித் தொடர்பாளர் காசிம் ரபீக் கூறுகையில், கடந்த ஒரு வருடமாகவே பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற இனவெறித் தாக்குதல்கள் நடந்தபடிதான் உள்ளன. இதுகுறித்து போலீஸ் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் இணைந்து செயல்படுகிறோம் என்றார்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 17 முதல் 19 வயதுக்குள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தி :தட்ஸ்தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin