உலமாக்கள் நல வாரியம் மூலம் இதுவரை 4,808 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என, வக்ஃபு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல் ரகுமான் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் நிருபர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
உலமாக்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாரியத்தின் மூலம் உறுப்பினர்களாக சேர்வதற்கு 8,825 பேர் மனு அளித்தனர். இவர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு இதுவரை 4,808 பேர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ளவர்களுக்கு அடையாள அட்டைகள் விரைவில் வழங்கப்படும்.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு எந்தெந்த சலுகைகள் அளிக்கப்படுகிறதோ, அதே சலுகை உலமாக்கள் நல வாரிய அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கும் வழங்கப்படும். திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமாக 4 இடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வக்ஃபு வாரியம் நலிவடைந்து உள்ளதால் வருவாயை பெருக்க தனிக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மீட்கப்படும் இடங்களில் கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள் கட்டப்படும்.
வேலூர் அருகே சேத்தனூரில் 23 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள இந்த இடத்தில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், வக்ஃபு வாரியம் சார்பில் அரசின் விதிமுறைக்கு உட்பட்டு திருச்சி அல்லது தஞ்சாவூரில் மருத்துவக் கல்லூரியும், திருநெல்வேலியில் பொறியியல் கல்லூரியும் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்
பேட்டியின் போது அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் உடனிருந்தார்.
செய்தி : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக