
ஐந்து மகன்களை ஒருசேர பெற்று சபீராகான் என்ற இந்தியப் பெண்மணி சந்தோஷமாக இருக்கிறார் என்றால் 30 வருடங்களாக வளர்த்து, கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்ற தன்னுடைய மிக நீளமான கைவிரல் நகங்களை இழந்துவிட்டு சோகத்தில் இருக்கிறார் ஒர் அமெரிக்க பாட்டி.
அமெரிக்காவில் உள்ள சால்ட் லேக் சிட்டியைச் சேர்ந்தவர் 68 வயதான லி ரெட்மாண்ட். முப்பது வருடமாக வெட்டாமல் வளர்த்த 28 அடி 4 இன்ச் நீள விரல் நகங்களுக்குச் (ஒவ்வொரு விரல் நகமும் 34 இன்ச் நீளமுடையவை) சொந்தக்காரர் இவர். இவருடைய இந்த சாதனை கின்னஸ் உலகச் சாதனை நிறுவனத்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு வெளிவர இருக்கும் புதிய கின்னஸ் சாதனை புத்தகத்தில் இந்தப் பாட்டி சக சாதனையாளரான அமெரிக்கர் மெல்வின் பூத் உடன் இடம் பெற உள்ளார்.
இந்த சந்தோஷ தருணத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கார் விபத்து ஒன்றில் இவருடைய சாதனை நகங்கள் சேதமடைந்துவிட்டன. வேறு வழியில்லாமல் அவற்றை அவர் நீக்கி விட்டார்.
அந்தக் கார் விபத்திற்குப் பிறகு, தற்போது வாயைத் திறந்திருக்கும் இவர் கூறுகையில்,
“கார் விபத்தில் என் விரல் நகங்களை இழந்ததைத்தான் என் வாழ்வில் நிகழ்ந்த மிக மோசமான சம்பவமாகக் கருதுகிறேன். என் பேரன் சொன்னது போல், 30 வருடமாக பல்வேறு சிக்கல்களுக்கிடையே பராமரித்து வளர்த்த நகத்தை, என் குழந்தையை ஒரு நொடியில் இழந்துவிட்டேன்.
மக்கள் என்னைப் பற்றி பேசியதை விட, என் நகங்களைப் பற்றி அக்கறையாக விசாரித்தது தான் அதிகம். அதன் இழப்பு என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கி விட்டது. என் அடையாளத்தை இழந்ததுடன், என் வாழ்வின் ஒரு பகுதியை இழந்தது போல் உள்ளது” என்று உருக்கமாக கூறியிருக்கிறார்.
விபத்து நேர்ந்து நகங்களை இழந்தப் பின்பு மீண்டும் நகங்களை வளர்க்கத் துவங்கினார் இந்தப் பாட்டி. இப்போது அவற்றின் நீளம் 4.5 இன்ச் அளவில் உள்ளன.
“முன்புப் போலவே இப்போதும் நகங்களை வளர்ப்பீர்களா என்று என்னைச் சந்திப்பவர்கள் கேட்கிறார்கள். அது முடியாது. சில விஷயங்கள் வாழ்வில் ஒரு முறைதான் நிகழும் என்று கூறுவேன்.மேலும் அவ்வளவு நீளத்திற்கு நகத்தை வளர்க்க எனக்கு முப்பது வருடங்கள் பிடித்தன. அது உலகச் சாதனையாகவும் ஆயிற்று . நான் மேலும் 30 வருடங்கள் உயிருடன் இருக்கமாட்டேன். அதனால் அது சாத்தியமே இல்லை” என்றும் சொல்லும் லி ரெட்மாண்ட்,
“நான் எப்போதும் எதையும் நீளமான நகங்களோடுதான் செய்து வந்தேன். நகமில்லாத நிலையில் என் காரியங்களில் ஈடுபடுவதில் சிரமமில்லாமல் இருக்கிறது. நான் எடுக்கும், வைக்கும் பொருட்களின் எடையும் பலமடங்கு குறைந்ததுபோல் தெரிகிறது” என்கிறார்.
சாதனை நிறைவேறும் நேரம் அந்தச் சாதனை கையைவிட்டு போய்விட்டது என்றால் அந்தச் சோகம் கொடுமையானது.
Thanks : American News
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக