செவ்வாய், 13 அக்டோபர், 2009

தனிநபர் செல்போன்களுக்கு அவரவர் தேசிய அடையாள அட்டை எண்?

தேசிய அடையாள அட்டையில் இடம்பெறும் 10 இலக்க எண்ணையே செல்போன் எண்ணாக வழங்குவது குறித்து சி-டாட் பரிசீலித்து வருகிறது.

கடந்த ஆண்டு பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நாட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கென தனி ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக நந்தன் நிலகேணி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது செல்போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாதந்தோறும் ஒரு கோடி பேர் புதிதாக செல்போன்களை வாங்குகின்றனர். இதனால் 10 இலக்க எண்கள் ஒதுக்கீடு செய்வது பெரும் பிரச்னையாக உள்ளது. 10 இலக்க எண்கள் முற்றிலுமாக தீர்ந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு மாற்று ஏற்பாடுகளை உருவாக்க மத்திய தொலைத்தொடர்புத் துறை சி-டாட் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது 11 இலக்கம் அல்லது 12 இலக்க எண்ணை ஒதுக்கலாமா என்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. அவ்விதம் ஒதுக்கினாலும் அதிகரித்து வரும் செல்போன் உபயோகிப்பால் இந்த எண்களும் தீர்ந்துவிடும் வாய்ப்புள்ளது.
எனவே ஒரே எண்ணை பல வகைகளில் பயன்படுத்தும் முறையைக் கையாள முடிவு செய்யப்பட்டுள்ளதாக சி-டாட் செயல் இயக்குநர் பி.வி. ஆச்சார்யா தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ளது போல சமூக பாதுகாப்பு எண், தேசிய அடையாள அட்டை எண் உள்ளிட்ட அனைத்துக்கும் ஒரே எண் இருப்பது போல செல்போன் எண், ஓட்டுநர் உரிமம் அனைத்துக்கும் ஒரே எண் அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.

தற்போது இது பரிசீலனையில் உள்ளது. இதை அமல்படுத்துவது குறித்து உரிய அனுமதி பெற்று அதன் பிறகே சோதனை அடிப்படையில் பயன்படுத்தி பின்னர் செயல்பாட்டுக்குக் கொண்டு வர முடியும் என்றார் ஆச்சார்யா.

கடந்த மே மாதம் இது தொடர்பான கள ஆய்வு நடத்தப்பட்டது. இதற்கு எவ்வளவு செலவாகும் என்பதும் இறுதி செய்யப்படவில்லை.
இருப்பினும் ஓராண்டுக்குள் இது இறுதி வடிவம் பெறும் என்றும் ஆச்சார்யா நம்பிக்கை தெரிவித்தார்.

2003-ம் ஆண்டில்தான் செல்போன்களுக்கு 10 இலக்க எண் ஒதுக்கீடு செய்வதென தீர்மானிக்கப்பட்டது. 2030-ம் ஆண்டில் செல்போன் உபயோகிப்பாளர் எண்ணிக்கை 75 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதே செல்போன் உபயோகிப்பாளர் எண்ணிக்கை 44 கோடியைக் கடந்துவிட்டது.

தற்போது புழக்கத்தில் உள்ள 10 இலக்க எண்ணுக்கு மாற்றாக கூடுதலாக எண்கள் அதாவது 11 இலக்கமோ அல்லது குறைவாக 9 இலக்கமோ உபயோகிக்க வேண்டுமென்றால், செல்போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் பெருமளவு தொகையை முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.
இதைக் கருத்தில் கொண்டு செல்போன் எண் முறையை சீரமைக்க அரசும் தனியார் செல்போன் நிறுவனங்களும் தீவிரம் காட்டுகின்றன.
1993-ம் ஆண்டு தொலைபேசி எண்கள் முறை வகுக்கப்பட்டது. பின்னர் இரண்டாவதாக 2003-ல் மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

செல்போன் எண்கள் மாற்றப்படுவது இந்தியாவில் மட்டும் நிகழ்வதல்ல. உபயோகிப்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கேற்ற சீனா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் மாற்றப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin