செவ்வாய், 13 அக்டோபர், 2009

லண்டன் ராயல் தபால் நிலையம்.


ஒரு கால்காசி கடிதத்தை 40 வருடம் கழித்து உரிய முகவரியில் சேர்த்திருக்கிறது லண்டன் ராயல் தபால் நிலையம்.

இங்கிலாந்தில் உள்ள ஆல்மாண்ட்பரி என்ற ஊரைச் சேர்ந்த டேவிட் - ஜெனிஃபர் பாலிசர் தம்பதிக்கு சமீபத்தில் ஒரு கடிதம் வந்தது. அவர்களுக்கு வந்திருந்த ரசீதுகளுக்கு இடையே இந்தக் கடிதமும் கிடந்தது. ஆனால், அதில் இவர்களுக்கு முன்பாக அந்த வீட்டில் குடி இருந்த நபரின் பெயர் போட்டிருந்தது.

1969இல் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், ஹீதர் என்ற நபர் சந்தோஷமாகக் கழிந்த தன்னுடைய விடுமுறைக் காலத்தை பற்றி செட்ஜ்விக் தம்பதியினருக்கு எழுதியிருந்தார். தான் அப்போது ரசித்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி குறித்துக் கூட ஹீதர் வர்ணித்திருந்தார்.

அந்தக் கடிதத்தின் ஒரு பக்கம் புகழ்பெற்ற அன்னா ஹாத்வே காட்டேஜ் படம் அச்சிடப்பட்டிருந்தது. ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்து பெயர் பெற்ற டேவிட் காரிக் என்ற நடிகர் ஸ்டார்ட்போர்ட் பகுதியில், 1769இல் கட்டிய முதல் நாடக அரங்கைக் கொண்டாடும் வகையில் தயாரிக்கப்பட்ட சிறப்பு தபால் முத்திரை (1769- 1969)யை அக்கடிதம் கொண்டிருந்தது.

இது குறித்து திருமதி பாலிசர் கருத்து கூறுகையில், “அந்தக் கடிதம் மற்ற கடிதங்களுடன் கால்மிதியின் மீது கிடந்தது. ‘யாருடா அது… இப்பப்போய் போஸ்ட்கார்ட் போடுவது?’ என்றுதான் எனக்கு முதலில் ஆச்சரியப்பட்டேன். அந்த போஸ்ட்கார்டை எடுத்து பெயரையும் முகவரியையும் பார்த்தேன். தவறான முகவரிக்கு வந்த கடிதம் என்று நினைத்தேன். பிறகுதான் கவனித்தேன் அந்த போஸ்ட்கார்டின்மீது 5d தபால்தலை ஒட்டப்பட்டிருந்தது. அப்போது தான் புரிந்தது அது வந்த முகவரி சரியானதுதான் ஆனால், 40 வருடங்கள் கழித்து வந்திருக்கிறது என்று” என்று சொல்லி சிரிக்கிறார்.

கடிதம் எழுதப்பட்ட செட்ஜ்விக் தம்பதியினர் அந்த வீட்டை காலி செய்து நீண்ட காலம் ஆகிறதாம். திருமதி பாலிஸர் 1986இல் அந்த வீட்டுக்கு வருவதற்கு முன்பாக இரண்டு பேர் வசித்திருக்கிறார்கள்.

“40 வருடமானாலும் அந்த போஸ்ட்கார்டு புத்தம்புதிது போல் இருக்கிறது. நாங்கள் அக்கம்பக்கம் விசாரித்தபடியே இருக்கிறோம். செட்ஜ்விக்கின் உறவினர்கள் யாராவது அறிய வந்தால் கூட அந்தக் கடிதத்தை உரியவரிடம் சேர்ப்பித்து விடுவோம்” என்கிறார் பாலிஸர்.

40 வருடம் கழித்து கடிதம் ஒன்று உரிய முகவரிக்குச் சென்றடைந்துள்ளது குறித்து ராயல் மெயிலின் செய்தித் தொடர்பாளரை தொடர்பு கொண்டு கேட்டால், “அந்த போஸ்ட்கார்டைப் பார்க்காமல் எந்த முடிவுக்கும் வரமுடியாது. தபால் பிரிப்பையும், உரிய முகவரிக்கு உரிய நேரத்தில் அவற்றை சேர்ப்பிப்பதிலும் நாங்கள் துல்லியமாக இருக்கிறோம். இப்படி ஒரு விஷயம் நடந்திருக்குமானால், அது எப்படி நடந்தது என்பதை கண்டறிவது மிகவும் சிரமம். அந்தக் கடிதத்தை சமீபத்தில் யாராவது மீண்டும் தபால் செய்திருக்கக்கூடும்” என்கிறார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, வேலைநிறுத்தத்தில் ஈடுபட ராயல் மெயில் ஊழியர்கள் முடிவு எடுத்திருக்கும் சூழ்நிலையில் இந்த 40 வருடக் கடிதம் சிக்கலை உருவாக்கி இருக்கிறது அங்கே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin