ஞாயிறு, 11 அக்டோபர், 2009

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற தூத்துக்குடி மாவட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : வேலைவாய்ப்பு அதிகாரி அழைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பம் செய்யலாம்.

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி கலைச்செல்வன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் முடிவுற்ற பதிவுதாரர்களுக்கு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதிக்கு 150 ரூபாயும், 12ம் வகுப்பு கல்வித்தகுதிக்கு 200 ரூபாயும், பட்டதாரிகளுக்கு 300 ரூபாயும் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற விரும்புபவர்கள் 30.9.2004 க்கு முன்பாக தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, நாளது தேதி வரை பதிவினை புதுப்பித்துள்ள மனுதாரர்கள் 30.11.2009 வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கலாம். விண்ணப்ப படிவம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. மனுதாரர் அனைத்து ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தினை அனைத்து அலுவலக வேலைநாட்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பபடிவத்துடன் வருவாய் ஆய்வாளரிடம் பெறப்பட்ட தகுதிச்சான்று, அரசுடைமையாக்கப்பட்ட பாங்குகளில் புதியதாக துவக்கப்பட்ட பாங்கு கணக்கு புத்தகம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

1.10.2007 முதல் 31.12.2007 வரை மற்றும் 1.10.2008 முதல் 31.12.2008 வரையும் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்பித்தவர்கள் சுய உறுதிமொழி ஆவணத்தை 30.11.2009க்குள் சமர்பிக்க வேண்டும். சமர்பிக்காதவர்களுக்கு தொடர்ந்து உதவித் தொகை வழங்க இயலாது.
பயனாளிகள் அனைவருக்கும் நடப்பு காலாண்டிற்கான உதவித் தொகை அவர்களது பாங்கு கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பம் சமர்பித்து உதவித் தொகை கிடைக்காதவர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, பாங்கு கணக்கு புத்தகத்தில் நாளது தேதி வரையிலான குறிப்புகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும்.

எனவே இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியும், விருப்பமும் உடைய பதிவுதாரர்கள் வரும் 30ம் தேதிக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin