ஸ்ரீவைகுண்டத்தில் வார்டு வாரியாக அனைவருக்கும் இலவச டிவிக்கள் கொடுக்க வேண்டும் என கோரி தாசில்தார் ஆபிஸை காங்கிரஸார் முற்றுகையிட்டனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள 18 வார்டுகளுக்கு இலவச டிவிக்களை அரசு வழங்காமல் குடோனில் வைத்திருந்தது. இதையடுத்து இடைத்தேர்தல் வந்ததால் டிவிக்கள் வழங்குதல் மேலும் தாமதமானதை வைத்து தினமலர் செய்தி வெளியிட்டது. இதனை தொடர்ந்து டிவிக்களை வழங்க அரசு நிர்வாகம் முடிவு செய்து வழங்கியது. குறைவான எண்ணிக்கையில் டிவிக்கள் வந்துள்ளதால் தாலுகா நிர்வாகம் சிக்கலில் மாட்டியுள்ளது.
மேலும் வார்டுவாரியாக டிவிக்கள் வழங்க வேண்டும் எனவும், பாக்கி உள்ள வார்டு மக்களுக்கு வழங்கவேண்டுமென கோரி ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆபிஸை காங்கிரஸார் முற்றுகையிட்டனர்.
போராட்டத்திற்கு ஸ்ரீவைகுண்டம் நகர காங்கிரஸ் தலைவர் சேது பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் நல்லகண்ணு, இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் சிங்கப்பன், நகர இளைஞரணி தலைவர் வெங்கடேஷ், வட்டார செயலாளர் ஜெயராஜ், ஐஎன்டியுசி., துணைத்தலைவர் சந்திரன், 15வது வார்டு கவுன்சிலர் சொர்ணலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெண்கள், ஆண்கள் என 50க்கும் மேற்பட்ட காங்கிரஸார் முற்றுகையிட்டனர்.
தாசில்தார் பரமசிவம் இவர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 15ம் தேதிக்குள் வரிசையாக வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததின்பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக