புதன், 9 செப்டம்பர், 2009

ரமழான் - இறுதிப் பத்து நாட்கள்

ரமளானின் இறுதிப் பத்து நாட்கள் பற்றியும் அதில் செய்ய வேண்டிய அமல்கள் பற்றியும் தமிழகத்தை சேர்ந்த மார்க்க அறிஞர் அஷ்ஷேய்க். பிஸ்மில்லாஹ் கான் பைஜி அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ பதிவினை காண்பதற்கு இங்கு சொடுக்கவும்

ரமளானின் இறுதிப் பத்து. லைலத்துல் கத்ர், இஃதிகாஃப்

புனித மிக்க ரமளான் மாதத்தின் கடைசிப்பத்து நரகின் விடுதலையை உள்ளடக்கிய சிறப்புக்குரியதும், மேலும் லைலத்துல் கத்ர் இரவு போன்ற சிறப்பினை உள்ளடக்கியதுமான பெரும் சிறப்புகளைக் கொண்டதாகும். அருள்மிகு ரமளானின் இவ்விறுதிப் பத்து நாட்களில் பிரயாசைப் பட்டுச் செய்கின்ற நற்செயல்களுக்கு அதிகமதிகம் நன்மைகளும் பன்மடங்காகக்கப்பட்ட நற்கூலிகளும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் அதிக சிரத்தையுடன் நன்மைகள் செய்வதில் தீவிரம் காட்டுபவர்களாகவும் அழுத்தம் உடையவர்களாகவும் இருந்தார்கள்.

நபியவர்கள் ரமளான் இறுதிப் பத்தில் கருமமாற்றியது பற்றி ஆயிஷh (ரலி) அவர்கள் தெளிவாக அறிவிக்கின்றார் கள்: ரமளானின் கடைசி பத்து வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் கச்சை கட்டிக் கொண்டு அவற்றின் இரவுகளை விழித்திருந்து கழிப்பார்கள். தம் குடும்பத்தினரையும் விழித்தெழச் செய்வார்கள் (புகாரி)

ஆயிஷh (ரலி) அவர்கள் அறிவிக்கும் பிரிதொரு ஹதீஸ் இவ்வாறு தெளிவு படுத்துகின்றது: நபியவர்கள் முந்தைய இருபது நாள் இரவுகளில் விழித்திருந்து தொழவும் செய்தார்கள். தூங்கவும் செய்தார்கள். ஆனால் இறுதிப் பத்து நாட்கள் வந்து விட்டால் கச்சை கட்டிக் கொண்டு அமல்களில் முழுமையாக ஈடுபடுவார்கள். (முஸ்னத் அஹ்மத்)

ரமளான் மாதத்தின் இறுதிப் பத்தின் மகத்துவமும், சிறப்பும் பற்றி இந்த ஹதீஸ்கள் தெளிவாக விளங்குகின்றன. இந்நாட்களில் நபி (ஸல்) அவர்கள் முதல் இருபது நோன்பு நாட்களையும் விட இந்நாட்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கினறார்கள் என்பது தெளிவாகின்றது. குர்ஆன் ஓதுவது, அதிகமதிகம் திக்ருகளில் ஈடுவடுவது, அதிகமதிகம் தர்மம் செய்வது இவ்வாறான நன்மைகளாகும்.

இஃதிகாஃப்

இந்தப் பத்து நாட்களில் மற்றுமொரு சிறப்பு இஃதிகாஃப் இருப்பதாகும். இஃதிகாஃப் என்பது இலளகீக காரியங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் வழி பாட்டிலேயே முழுமையாக ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தங்கி விடுவதாகும். ஒரு முஸ்லிம் இப்படிச் செய்வது அல்குர்ஆனும் நபி மொழிகளும் வலியுறுத்தியுள்ளன. நபியவர்கள் இவ்வாறு ஈடுபட்டதற்குக் காரணம் இந்த இரவுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற முக்கிய சிறப்பயாகும். அவ்வாறு ஒருவர் ஈடுபடும்போது அவர் லைலதுல் கத்ர் இரவைப் பெறக் கூடிய வாய்ப்பைப் பெறுகினறார்.

அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெருவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி அறிவித்தார் : அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று. உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)

ஒருவர் பிற மனிதர்களை விட்டும் விலகி அல்லாஹ்வின் பள்ளிவாசல் ஒன்றில் இஃதிகாஃப் இருப்பதன் நோக்கம்; சங்கடங்களின்றி மனஒருமையோடு அல்லாஹ்வை வழிபடுவதற்காகவாகும். அவ்வாறு இருப்பதனால் அம்மனிதர் லைலதுல் கத்ர் எனும் மகத்துவம் மிக்க இரவை அடைந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றார்;. அத்தோடு உடலுறவு, அதற்கு முன்னுள்ள காரியங்களான முத்தமிடுதல், ஆசையுடன் தொடுதல், போன்ற காரியங்களும் இஃதிகாஃப் இருப்பவருக்கு விலக்கப்பட்டதாகும். அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:

இஃதிகாஃப் இருப்பவர்கள் திக்ர் செய்வதில், குர்ஆன் ஓதுவதில், நஃபிலான தொழுகைகளில், இன்ன பிற வழிபாடுகளில் ஈடுபட்டிருத்தல் அவசியமாகும். மேலும் உலக விஷயங்களில் ஈடுபடுதல் மற்றும் தேவையற்ற காரியங்களை விட்டும் தவர்ந்து இருத்தல் அவசியமாகும். ஆனால் ஏதேனும் முக்கிய நலனை முன்னிட்டு இஃதிகாஃப் இருப்பவர் தனது குடும்பத்தாருடன் ஆகுமான பேச்சுக்கள் பேசுவதில் எவ்விதத் தவறுமில்லை. அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகின்றான்: இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்த இருக்கும்போது மனைவியர்களுடன் கூடாதீர்கள். (2 : 187)

லைலதுல் கத்ர்

லைலதுல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். ரமளான் மாத இறுதிப் பத்தின் ஒற்றைப்பட்ட நாட்களில் இந்த இரவு வருமென அதிகமனா நபி மொழிகள் கூறுகின்றன. இவ்விரவு ஒரு ஆண்டில் 27லும் மற்றொரு ஆண்டில் 25, 23, 21 29 போன்ற நாட்களிலும் வர வாய்ப்பிருப்பதால் இவ்விரவு ஒவ்வொரு ஆண்டிலும் 27ல் தான் வருமெனத் எண்ணி அமல்கள் செய்வது தவறாகும். அவ்விரவில் பாக்கியமும், அதிக நன்மையும், சிறப்பும் இருப்பதால் இந்த இரவு அருள்பாலிக்கப்பட்ட இரவு என்று அல்லாஹ் அல் குர்ஆனில் சிறப்பித்துக் கூறுகினறான். அந்த இரவில் மலக்குகள் நன்மைகள், அருட்பாக்கியங்கள், சிறப்புகள் ஆகியவற்றைக் கொண்டு பூமியில் இறங்குகின்றார்கள். அந்தச் சிறப்பு வைகரை உதயமாகும் வரையிலும் இருக்கும் என்று அருள்மறையாம் திருமறை குர்ஆன் சான்று பகர்கின்றது.

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணிய மிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அதில் மலக்குகளும், (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் தன் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்). அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97 : 1-5)

நபியவர்கள் நவின்றதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கனிறார்கள்: விசுவாசத்துடனும், நன்மையை எதிர் பார்த்தும் எவர் லைலதுல் கத்ர் இரவில் தொழுதாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகினறன. (புகாரி, முஸ்லிம்). .

யா அல்லாஹ்! வழிகேட்டில் ஆழ்த்தக் கூடிய குழப்பங்களை விட்டும் எங்களைக் காத்தருள்வாயாக! நன்மையின் பக்கம் விரைந்து செல்லக்கூடிய, தீமைகளை விட்டும் விலகிச் செல்லக்கூடிய, சுவர்க்கத்து மாளிகைகளில் நிம்மதியாக தங்கி வாழக்கூடிய மக்களுடன் எங்களைச் சேர்த்து வைப்பாயாக! உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக் கூடிய, அழகாய் உனக்கு வழிபட்டு நடந்து உனது நேசத்தைப் பெற்றோரின் குழுவில் எங்களையும் இணைத்து வைப் பாயாக! கருணை மிக்க இறைவனே! பயங்கரமான நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றி உனது கருணை கொண்டு எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும். மற்றும் எல்லர் முஸ்லிம்களுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin