வியாழன், 24 செப்டம்பர், 2009

சிம்லாவில் பிளாஸ்டிக் தார் ரோடு

திருப்பரங்குன்றம் : மதுரை பேராசிரியர் வாசுதேவன் கண்டுபிடித்த பிளாஸ்டிக் தார் ரோடு சிம்லாவில் அமைக்கப்பட்டது. மறு பயன்பாட்டிற்கு பயன்படாத பாலித்தீன் கவர்கள், பிஸ்கட், சாக்லேட் கவர்கள், தெர்மாகோல் போன்றவற்றை மீண்டும் பயன்படுத்தவும், அவற்றை எரிப்பதால் பூமி வெப்பமடைவதை தடுக்கவும் மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரி பேராசிரியர் வாசுதேவன் ஆராய்ச்சி மேற் கொண்டார். இவற்றை ஜல்லிகளில் கலந்து, அவற்றுடன் தார் சேர்த்து பிளாஸ்டிக் ரோடு அமைத்தார்.


உலகில் முதன்முறையாக இவரது கண்டுபிடிப்பான பிளாஸ்டிக் ரோடு 2000ல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், மும்பையிலும் உருவாயின. தற்போது கேரளாவில் பல இடங்களில் அமைக்கப்படுகிறது. சாதாரண தார்ரோட்டை காட்டிலும் பிளாஸ்டிக் ரோடுகள் பல ஆண்டுகள் நீடித்து உழைக்கும், பராமரிப்பு செலவு கிடையாது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு பல கோடி மிச்சமாகும் என்பதை நிரூபித்தார்.

மத்திய அரசு அங்கீகாரம்: பிளாஸ்டிக் தார் சாலையின் தன்மை, தரம், உழைப்பு, ஆயுள், பயன்கள், செலவுகள். சாதாரண தார் ரோட்டுக்கும், பிளாஸ்டிக் தார் ரோட்டுக்கும் உள்ள வித்தியாசம் ஆகிய விபரம் அடங்கிய குறிப்புளை சமீபத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் புத்தகமாக வெளியிட்டது. மத்திய கிராம வளர்ச்சி அமைச்சகத்தின் தேசிய கிராமப்புற ரோடுகள் வளர்ச்சி நிறுவனம், கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் தார் ரோடுகள் அமைக்க அங்கீகரித்து வழிமுறைகளை வகுத்தது. சிம்லாவில் பிளாஸ்டிக் தார் ரோடு: டில்லி அறிவியல் தொழில்நுட்ப மையம் இந்த தொழில்நுட்பத்தை அங்கீகரித்து அனைத்து மாநிலங்களிலும் பிளாஸ்டிக் தார் ரோடு அமைப்பதற்கான ஆராய்ச்சிக்காக ரூ. 42 லட்சம் நிதி வழங்கியது. இமாசல பிரதேசம் சிம்லாவில் "டெஸ்ட்' பிளாஸ்டிக் தார் ரோடு அமைக்க அம்மாநில அரசு, பேராசிரியர் வாசுதேவனிடம் கேட்டது.

பேராசிரியர்கள் வாசுதேவன், ராமலிங்க சந்திரசேகர், வேல்கென்னடி, சுந்தரக்கண்ணன் சிம்லா சென்றனர். அங்கு ஜூபார் ஹட்டி விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் "டுடூ' என்ற ஊரில் ஒரு கி.மீட்டருக்கு பிளாஸ்டிக் தார் ரோடு அமைத்தனர். வாசுதேவன் கூறுகையில், " பிளாஸ்டிக் தார் ரோடு அமைப்பதை அங்குள்ள அதிகாரிகள் பாராட்டினர். அக்டோபருக்குள் அங்கு பல இடங்களில் பிளாஸ்டிக் தார் ரோடு அமைக்க முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் அமைக்க விரும்புவோர் 0452-248 2240 , 94864 86728 ல் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin