அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்துக்கு பள்ளி மாணவர்கள் சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளனர்.
இது குறித்து "வேர்ல்ட் டிராவல் கிளப்'பின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீமதி, "டூர் அமெரிக்கா'வின் நிர்வாகி குளோரியா லாம், அமெரிக்க "புளோரிடா ஸ்பேஸ் கோஸ்ட்'டின் நிர்வாகி கலீனா ஆகியோர் சென்னையில் திங்கள்கிழமை கூட்டாக கூறியதாவது:
8 வயது முதல் 17 வயது வரை உள்ள பள்ளிக்கூட மாணவர்களை "வேர்ல் டிராவல் கிளப்' மூலம் அமெரிக்காவுக்கு சுற்றுலா அழைத்துச் செல்ல உள்ளோம். மொத்தம் 12 நாட்கள் சுற்றுலாவில் முதலில் கலிபோர்னியாவுக்கும், அடுத்தது வாஷிங்டனுக்கும் அழைத்து செல்லப்படுவர். அங்குள்ள கலாசாரம், வரலாறு தொடர்பான அருங்காட்சியகங்களை அவர்கள் பார்வையிடலாம்.
அதன்பிறகு கென்னடி விண்வெளி மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இங்கு விண்கலம், ராக்கெட் ஏவுதளம், ராக்கெட் கட்டப்படுதல் குறித்து மாணவர்களுக்கு, விண்வெளி வீரர்கள் விளக்கம் அளிப்பர். அவர்களுடன் உரையாடவும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்தச் சுற்றுலாவுக்கு சுமார் ரூ. 1. 2 லட்சம் வரை செலவாகும். உணவு, தங்குமிடம் இதில் அடங்கும். தென்னிந்தியாவில் மட்டும் மொத்தம் 200 பேரை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம். வரும் டிசம்பரில் சுற்றுலா செல்வதற்கான முன்பதிவு நடைபெறும்.
ஊரக மாணவர்களும்...: அத்துடன் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த, படிப்பில் சிறந்த மாணவர்களையும் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம். இதற்காகத் தமிழக அரசின் உதவியை நாட உள்ளோம் என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக