செவ்வாய், 8 செப்டம்பர், 2009

சுந்தரனார் பல்கலை. 20-வது ஆண்டு விழா ஓராண்டு காலம் கொண்டாடப்படும்: துணைவேந்தர்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 20-வது ஆண்டு விழா ஓராண்டு காலத்திற்கு கொண்டாடப்படும் என துணைவேந்தர் இரா.தி. சபாபதி மோகன் தெரிவித்தார்.

இப் பல்கலைக்கழகத்தின் 20-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் இந்த கல்வியாண்டில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கான வரவேற்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வகித்த துணைவேந்தர் மேலும் பேசியதாவது:

1990-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம், 20 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. இந்த வளர்ச்சி தொடர வேண்டும். 25-வது ஆண்டான வெள்ளி விழாவை குடியரசுத் தலைவரை அழைத்து கொண்டாடும் வகையில் அந்த வளர்ச்சி இருக்க வேண்டும்.

இந்த 20-வது ஆண்டு விழாவானது ஓராண்டு காலத்திற்கு கொண்டாடப்படும். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழக முதல்வர், இதர அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் இதர துறைத் தலைவர்களை அழைத்து வந்து அந்த விழா நடத்தப்படும். நிறைவு விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

மனதில் எதை நிரப்ப வேண்டும்: மாணவர்கள் இந்தப் பருவத்தில் எதைக் கொண்டு மனதை நிரப்ப வேண்டும் என முடிவு செய்து கொள்ள வேண்டும்.

முதலில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொழுதுபோக்கும் அவசியம்தான். ஆனால் அதால் மட்டுமே மனதை நிரப்பிவிடக் கூடாது.

நான் துணைவேந்தராக இருக்கலாம். ஆனால் உங்களுக்கு கட்டளை இடுபராக இல்லாமல் உங்களில் ஒருவனாக இருந்து இந்த பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன்.

உதவித் தொகை: மற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு இல்லாத சலுகைகள் இந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. தகுதியான 100 மாணவர்களுக்கு தலா ரூ. 1,000 உதவித் தொகையும், ஆராய்ச்சி மாணவர்கள் அனைவருக்கும் உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழகத்தில் எந்த துறையும் மூடப்பட மாட்டாது. ஆனால் வேலைவாய்ப்பு கிடைக்கும் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த பல்கலைக்கழகத்தின் சார்பில் தற்போது 4 இடங்களில் மனோ கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்போது 5-வது கல்லூரியாக திசையின்விளையில் ஒரு மனோ கல்லூரி செவ்வாய்க்கிழமை திறக்கப்படுகிறது.

மாணவிகள் விடுதியில் ஒரு "இன்டர்நெட்' மையமும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கட்டப்பட்டு வரும் மாணவர்கள் விடுதி வரும் டிசம்பர் அல்லது ஜனவரியில் திறக்கப்படும் என்றார் துணைவேந்தர்.

விழாவில், கலைப்புல முதன்மையல் பேராசிரியர் ஏ. ராமசாமி, அறிவியல் புல முதன்மையல் சிவசங்கரன் நாயர், நிதி அலுவலர் செல்லையா மற்றும் மாணவர்கள் முதலாமாண்டு மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து பேசினர்.

அலுவலக கண்காணிப்பாளர் எஸ். கலாதேவி மற்றும் அவரது குழுவினர் ஒருமைப்பாடு பாடலை பாடினர்.

முன்னதாக, பல்கலைக்கழகப் பதிவாளர் எஸ். மாணிக்கம் வரவேற்றார். தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கே.எஸ்.பி. துரைராஜ் நன்றி கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin