வெள்ளி, 4 செப்டம்பர், 2009

தமிழகத்தில் இன்று அரசு விடுமுறை

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மறைவையொட்டி தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் மறைந்த செய்தி கேட்டு, தமிழக மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தத் துயரத்தில் தமிழகம் முழுவதும் பங்கு பெறுகிறது என்பதற்கு அடையாளமாக வெள்ளிக்கிழமை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இந்த விடுமுறை அறிவிப்பினையொட்டி வணிக நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் விடுமுறை அளித்து, இந்த துயரத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என கருணாநிதி தெரிவித்துள்ளார்.

வங்கிகள்: இந்த விடுமுறை அறிவிப்பினால், தமிழகத்திலுள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளும் வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருக்கும்.

நீதிமன்றங்கள்: ராஜசேகர ரெட்டியின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நீதிமன்றங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றக் கிளை மற்றும் தமிழகத்திலுள்ள சார்பு நீதிமன்றங்கள் வெள்ளிக்கிழமை இயங்காது. அதற்கு பதிலாக டிசம்பர் 19-ம் தேதி சனிக்கிழமை நீதிமன்றங்கள் இயங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin