வெள்ளி, 4 செப்டம்பர், 2009

இந்திய அரசியல் தலைவர்கள் சந்தித்த விமான விபத்துக்கள்


அரசியல் தலைவர்கள் விமான விபத்துக்களை சந்திப்பது இது முதல் முறையல்ல. பல்வேறு அரசியல் தலைவர்கள் விமான விபத்துக்களில் இதற்கு முன்பு சிக்கியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தி, 29 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி சப்தர்ஜங் விமான நிலையத்தில் கிளைடர் விமானத்தில் பறந்தபோது கீழே விமானம் விழுந்து உயிரிழந்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மாதவராவ் சிந்தியா 2001ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி கான்பூருக்கு விமானத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

லோக்சபா சபாநாயகர் பாலயோகி, 2002ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி மேற்கு கோதாவரி மாவட்டத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானா அமைச்சர்கள் ஓ.பி. ஜின்டால், சுரேந்திர சிங் ஆகியோர் விமானத்தில் சென்றபோது உயிரிழந்தனர்.

பிரபல நடிகை செளந்தர்யாவும், ஹெலிகாப்டரில் பயணித்தபோது விபத்தில் சிக்கி சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார் என்பது நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் தற்போது ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பலியாகியுள்ளார்.

ஆந்திராவில் 2வது விபத்து ...

ஆந்திராவில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்குவது இது 2வது முறையாகும்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி நான்கு பேருடன் ஹைதராபாத்திலிருந்து ஒரு தனியார் ஹெலிகாப்டர் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜெகதால்பூருக்குக் கிளம்பியது.

அப்போது சட்டீஸ்கர் மாநிலம் பஸ்தர் வனப்பகுதி மீது பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் மாயமானது.

3 மாதம் கழித்து ஹெலிகாப்டரின் சிதறிய பாகங்கள், ஆந்திர மாநிலம் பமனுரு வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பஸ்தர் பகுதியில் நொறுங்கி விழுந்திருக்கலாம் என தெரிய வந்தது.

அதில் பயணம் செய்தவர்களின் உடல்கள் பமுனுர் மலைப் பகுதியில், கண்டுபிடிக்கப்பட்டன. இந்த இடம் ஆந்திரா - சட்டீஸ்கர் எல்லைப் பகுதியில், கம்மம் நகரிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin