வியாழன், 3 செப்டம்பர், 2009

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார்


ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட ஐந்து பேரும் பலியாகி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்னூல் மாவட்டம் ரொல்லபென்டா என்ற இடத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் மலைக் குன்றின் மீது நொறுங்கிய நிலையில் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.

கர்னூலிலிருந்து 74 கிலோமீட்டர் தொலைவில் அந்த மலைக் குன்று உள்ளது.

ஹெலிகாப்டர் மலை மீது மோதி விழுந்துள்ளதாகவும், முற்றிலும் எரிந்து போன நிலையில் அது காணப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. அதில் பயணித்த யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பி்ல்லை என்றும் செய்திகள் கூறின.

ஹெலிகாப்டர் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதை இந்திய விமானப்படை அதிகாரி சாகர் பாரதி உறுதி செய்துள்ளார். விமானப்படை ஹெலிகாப்டர்கள்தான், ரெட்டி பயணித்த ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்ட இடம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைக் குன்று என்பதால் விமானப்படை ஹெலிகாப்டர்களால் அங்கு இறங்க முடியாத நிலை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஹெலிகாப்டர் இறங்க முடியாத நிலையில் இருப்பதால் விமானப்படை பாராசூட் பிரிவு கமாண்டோக்கள் அனுப்பப்பட்டனர்.

அவர்கள் சற்று முன்னர் மலைப் பகுதியில் இறக்கி விடப்பட்டனர். இதையடுத்து ஹெலிகாப்டரை நெருங்கிய அவர்கள், அங்கு ஐந்து உடல்கள் இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து ரெட்டி உள்ளிட்ட ஐவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

ரெட்டி மரணச் செய்தி அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் விவரம்...

முதல்வர் ராஜசேகர ரெட்டி

சுப்ரமணியம்- முதல்வரின் முதன்மைச் செயலாளர்.

வெஸ்லி - முதல்வரின் முதன்மை பாதுகாப்பு அதிகாரி.

கேப்டன் எஸ்.கே.பாட்டியா - ஹெலிகாப்டர் கேப்டன்.

கேப்டன் எம்.எஸ். ரெட்டி- ஹெலிகாப்டர் துணை கேப்டன்.

இடைக்கால முதல்வர் ரோசய்யா

முதல்வர் ராஜசேகர ரெட்டி அகால மரணம் அடைந்ததைத் தொடர்ந்து மூத்த அமைச்சரும், நிதியமைச்சருமான கே.ரோசய்யா இடைக்கால முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin