செவ்வாய், 15 செப்டம்பர், 2009

தூத்துக்குடி மாவட்டத்தில் "108 ஆம்புலன்ஸ் சேவை' தொடக்கம்


தூத்துக்குடி மாவட்டத்தில், "இ.எம்.ஆர்.ஐ. 108' இலவச ஆம்புலன்ஸ் சேவையை மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் திங்கள்கிழமை தொடக்கிவைத்தார்.

தமிழக அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ல் இந்த ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. முதலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 20 ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் இந்த சேவை தொடங்கப்பட்டது. பின்னர் 23 மாவட்டங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 228 இலவச ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2-ம் கட்டமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. இதற்காக 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆட்சியர் கோ. பிரகாஷ் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அக்டோபர் 15-ம் தேதிக்குள் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என இ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவைக்காக சென்னையில் 108 தொலைபேசி எண் கொண்ட அவசர உதவி சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதிலும் இருந்து வரும் அழைப்புகளை இந்த மையம் ஏற்றுக் கொண்டு, அந்த பகுதிக்கு அருகில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அனுப்பும்.

ஒவ்வொரு நாளும் சுமார் 700 அழைப்புகள் இந்த சேவை மையத்திற்கு வருகின்றன. இந்த மையத்தை தொடர்புகொண்டால் நகரமாக இருப்பின் 15 நிமிடத்திலும், கிராமமாக இருப்பின் 20 நிமிடத்திலும் தேவையான உதவி சென்றடையும்.

கர்ப்பிணிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்வது உள்ளிட்ட அனைத்து அதிநவீன வசதிகளும் ஆம்புலன்ஸில் உள்ளன.

நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் வேலுச்சாமி, துணை இயக்குநர் உமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

புகைப்பட உதவி : தூத்துக்குடி வெப்சைட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin