நோன்பு என்றால் என்ன?
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி உணவு, குடிபானம், உடலுறவு போன்றவற்றிலிருந்து விலகியிருத்தலாகும்.
நோன்பின் நேரம்: -
சுப்ஹுக்கு அதான் சொன்னது முதல் சூரியன் மறையும் வரையாகும்.
நோன்பின் சட்டம்: -
ரமலான் நோன்பானது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்று என்பதால் புத்தி சுவாதீனமுள்ள, பருவமடைந்த, நோன்பு நோற்பதற்கு முடியுமான ஆண்-பெண் அனைவர் மீதும் கடமையாகும்.
நிய்யத்து வைத்தல்: -
எல்லாச் செயல்களும் எண்ணத்(நிய்யத்)தின் அடிப்படையிலே அமையும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி)நிய்யத் என்றால் மனதால் எண்ணுதல் என்பது தான் பொருளாகும். இன்று மக்கள் செய்வது போன்று வாயால் மொழிவது கிடையாது.
நிய்யத் எப்போது வைக்க வேண்டும்?
கடமையான நோன்பு நோற்பவர், சுப்ஹுக்கு முன்பே இன்று நோன்பு நோற்கிறேன் என்று மனதில் உறுதி கொள்ள வேண்டும்.நபிலான நோன்பாக இருந்தால் காலையில் தாமதித்துக் கூட நோன்பை மனதில் நினைத்து நோன்பிருக்க முடியும். அதற்கு ஹதீஸில் அனுமதி உள்ளது. அதே நேரம் சுப்ஹிலிருந்து ஏதும் உண்ணாமலோ, பருகாமலோ இருந்திருக்க வேண்டும்.
‘ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலையில் என்னிடம் வந்து, உண்பதற்கு ஏதேனும் உள்ளதா? எனக் கேட்டார்கள். நாங்கள் இல்லை என்றோம். அப்படியாயின் நான் இன்று நோன்பு வைத்துக் கொள்கிறேன் எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), (ஆதாரம்: நஸாயீ)
ஸஹர் உணவு: -
நீங்கள் ஸஹர் செய்யுங்கள்: ஏனெனில் அந்நேரத்தில் பரக்கத் உள்ளது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி)
ஸஹர் உணவை தாமதப்படுத்தி, நோன்பு திறப்பதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் இருக்கிறார்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: அஹ்மத்)ஸஹர் செய்யும் விசயத்தில் நம் நாடுகளில் சில தவறுகள் நடைபெறுகின்றன.
உதாரணமாக, மூன்று மணிக்கே சாப்பிட்டு விட்டு சுப்ஹுத் தொழுகை கூட இல்லாமல் தூங்கி விடுகின்றனர். இது உண்மையில் மேலுள்ள சுன்னாவை விடுவதால் ஏற்படும் தவறாகும். ஏனென்றால் சுப்ஹுக்கு அதான் கூறப்படும் வரை உண்ணலாம் பருகலாம்.அதே போல் நோன்பு திறப்பதற்கு 10 நிமிடங்கள் தாமதிப்பதும் சுன்னாவுக்கு முரணனதாகும்.
நோன்பு திறக்கும் போது: -
நோன்பு திறந்த பின்னர், ‘தஹபள்ளமஉ வப்தல்லதில் உருகு வதபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’ என்று கூற வேண்டும்.பொருள்: தாகம் தீர்ந்தது, நரம்புகள் குளிர்ந்தன அல்லாஹ் நாடினால் கூலி கிடைத்து விடும். (ஆதாரம்: அபூதாவுத்)
நோன்பு திறக்கச் செய்தவருக்காக செய்யும் பிரார்த்தனை: -‘அஃப்தர இந்தகுமுஸ் ஸாயிமுன் வஅகல தஆமகுமுல் அப்ரார் வஸல்லத் அலைகுமுல் மலாயிகா’பொருள்: உங்களிடம் நோன்பாளிகள் நோன்பு திறந்தனர், நல்லவர்கள் உங்கள் ஆகாரங்களை உண்டனர், மலக்குகள் உங்களுக்காக (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தனர். ஆதாரம்: அபூதாவுத்.
நோன்பாளிகள் கவனத்திற்கு:
நமது நோன்புகள் ஏற்றுக்கொள்ளப்படவேண்டுமா?பொய்யுரைப்பது, புறம் பேசுவது, கோள் சொல்வது, பழி சுமத்துவது… போன்ற அனைத்து தீமையான காரியங்களை விட்டும் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்.யார் பொய்யான பேச்சுக்களையும், அவற்றை நடைமுறைபடுத்துவதையும் விட்டுவிடாமல் அவர் பசித்திருப்பதோ, அல்லது தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி, அஹ்மத், திர்மிதி)
நாம் நல்லவர்களாக வாழ்வதற்காக அல்லாஹ் நமக்கு வருடா வருடம் தரும் ஒருமாத பயிற்சியாகும் இந்த ரமலான் மாதம். ரமலானைப் போலவே ஏனைய காலங்களிலும் பேணுதலுடன் வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் செய்வானாக!
நோன்பை விட அனுமதியுள்ளவர்கள்: -
1) தள்ளாத வயதுடையவர்
2) தீராத நோயுள்ளவர்விடுபடும் ஒவ்வொரு நோன்புக்கும் பரிகாரமாக ஒரு ஏழை வீதம் உணவளிக்க வேண்டும்.
நோன்பை தற்காலிகமாக விட அனுமதியுள்ளவர்கள்: -
1) பயணிகள்
2) மாதவிடாய் மற்றும் பிள்ளைப் பேற்று (நிபாஸ்) விலக்குடையோர்
3) கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள்
4) தற்காலிக நோயாளிகளஇவர்களுக்கு நோன்பை விட அனுமதி உண்டு. இருந்தாலும் பின்னர் விடுபட்ட நோன்புகளைக் கணக்கிட்டு கழாச் செய்ய வேண்டும்.
நோன்பை முறிக்கக் கூடியவைகள்: -
1) வேண்டுமென்றே உண்ணுதல், பருகுதல்
2) நோன்புடன் பகலில் உடலுறவு கொள்ளுதல் (இவர்களுடைய நோன்பு பாலாகிவிடும்.
குற்றப்பரிகாரமாக ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். முடியாத போது தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்க வேண்டும். இதுவும் முடியாத போது அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்)
3) மாதவிடாய் அல்லது மகப்பேறு இரத்தம் வெளியாகுதல்
4) வேண்டுமென்றே வாந்தி எடுத்தல் (தானாக வெளியேறினால் நோன்பு முறிய மாட்டாது)
5) மதம் மாறுதல் (அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாகவும்)
கீழுள்ள விசயங்களால் நோன்பு முறியாது: –
1) மறந்த நிலையில் உண்ணுதல், பருகுதல் (புகாரி)
2) குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்தல் (புகாரி)
3) கடுமையான வெப்பத்தில் குளித்தல் (அஹ்மத், அபூதாவுத்)
4) நறுமணம் வாசனை சோப்புகளை உபயோகித்தல்
5) பற்பசை உபயோகித்து பல் துலக்குதல்
6) வாய் மூக்கு வழியாக இரத்தம் வெளியாகுதல்
7) இரத்தம் எடுத்தல், நோய் காரணமாக அவசியமேற்படின் ஊசி மருந்தேற்றல் போன்றவை.
(சக்திக்காக ஊசி வழியாக ஏற்றப்படும் குளுகோஸ் போன்ற வற்றினால் நோன்பு முறிந்து விடும்)‘PRIVATE “TYPE=PICT;ALT=8)”நோன்புடன் சுய நாட்டமின்றி ஸ்கலிதமாகுதல்9) தொண்டைக் குழியை அடையாதபடி உணவை ருசி பார்த்தலஇது போன்ற விடயங்களால் நோன்பு பாதிக்கப்படாது என்பதனை கவனத்தில் கொள்க.
பின்வரும் தினங்களில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும்: -
1) ஷவ்வால் மாத ஆறு நாட்கள்
2) ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழன்
3) ஒவ்வொரு மாதமும் அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் 13, 14, 15 ஆகிய நாட்கள்
4) துல்-ஹஜ் மாதம் ஒன்பதாம் நாளாகிய அறபா தினம்
5) முஹர்ரம் மாதம் 9, 10 ம் நாட்களில் நோற்கப்படும் ஆஷுரா எனப்படும் நோன்புகள.
நோன்பு நோற்பதற்கு தடை செய்யப்பட்ட நாட்கள்: -
1) சந்தேகத்திற்குறிய நாள் (ஷஃபான் 30 ம் நாளன்று சந்தேகத்துடன் நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது)
2) நோன்பு, ஹஜ் பெருநாள் தினங்கள்
3) அய்யாமுத் தஷ்ரீக் எனப்படும் 11, 12, 13 ம் நாட்கள் (தமத்துஃ மற்றும் கிரான் வகையான ஹஜ் செய்பவர்களுக்கு பிராணி அறுத்துப் பலியிட வசதியில்லாவிட்டால் இவர்கள் அத்தினத்தில் நோன்பு நோற்பர்)
4) வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்றல்
5) பெண்கள் கணவனது அனுமதியின்று நபிலான நோன்புகளை நோற்றல்.மேற்கூறிய சந்தர்ப்பங்களில் நோன்பு நோற்பது தடை செய்யப்பட் டுள்ளது.மேலே முக்கியச் செய்திகள் மட்டும் தரப்பட்டுள்ளன. மேலதிக விளக்கங்கள் தேவைப்படுவோர் மார்க்க அறிஞர்களை அணுகவும்.
யா அல்லாஹ்!
உண்மையான விசுவாசத்தோடும், உன்னிடம் நன்மையை எதிர் பார்த்தவர்களாகவும் இந்த ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று பாவக்கறைகளிலிருந்து நீங்கியவர்களாக மாறுவதற்கு நீயே எங்கள் அனைவருக்கும் அருள் பொழிவாயாக!
நன்றி : சுவனதேன்றல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக