140 ஆண்டுகளாக தூர்வாரப்படாத ஸ்ரீவைகுண்டம் அணையை தூர்வார நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அத் தொகுதி புதிய எம்.எல்.ஏ.விடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை சார்பில், அதன் அமைப்பாளர் எஸ். நயினார் குலசேகரன், எம்.பி. சுடலையாண்டி எம்எல்ஏவிடம் அளித்த மனு:
ஸ்ரீவைகுண்டம் அணை 140 வருஷங்களாகியும் தூர்வாரப்படவில்லை. இந்த அணையின் மூலம் வடகால், தென்கால் என, 25,600 ஏக்கர் சாகுபடி பெற்று வருகிறது.
தாமிரபரணி ஆற்றின் பகுதியில் 98.26 ஏக்கர் வனத் துறை வசம் உள்ளது. எனவே, வனத் துறை அனுமதி பெற்றால்தான் அணையை தூர்வார முடியும் என தாமிரபரணி வடிநில கோட்ட அதிகாரிகள் கூறுகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் உள்ள 29 குளங்களை தூர்வார ரூ. 28 கோடியில் புதிய திட்டம் ஒன்றை பொதுப்பணித் துறை தயார் செய்து, தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு கோரி அனுப்பியுள்ளது.
இத் திட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியைச் சேர்ந்த வெள்ளூர்குளம், பட்டர்குளம், செந்திலாம்பண்ணை குளம், பத்மநாபமங்கலம் குளம், கைலாசப்பேரி குளம், பேரூர் குளம், எசக்கன்குளம், பாட்டக்குளம், அகரம் குளம், கோரம்பள்ளம் குளம், பொட்டைக்குளம், பழையகாயல் குளம், ஆறுமுகமங்கலம் குளம், கொற்கை குளம், பேய்க்குளம் ஆகிய 15 குளங்களை தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது.
இக் குளங்களை தூர்வாருவதன் மூலம் வெள்ளக் காலங்களில் முழு அளவு தண்ணீரை தேக்கி இருபோக சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் விவசாயம் செய்ய முடியும்.
எனவே, இந்த திட்டம் நிறைவேற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக