ஸ்ரீவை மக்களை பற்றியும் ஊர் நடப்புகளையும் தெரிந்து கொள்ளலாம்,உங்களுடைய கருத்துகளையும் பதிவு செய்யலாம்..
ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009
தூத்துக்குடி எம்.பி ஜெயதுரைக்கு மு.க.அழகிரி அட்வைஸ்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில், மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எம்.பி ஜெயதுரை வைத்துள்ள டிஜிட்டல் பேனர்களுக்கு பதிலாக ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என, அறிவுரை கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம்,ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதில், திமுக., கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.பி.சுடலையாண்டி போட்டியிடுகிறார். இந்நிலையில்,தேர்தல் பிரச்சார வியூகமும் வகுக்கப்பட்டு,ஏரலில் இன்று தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் திமுக., தென் மண்டல அமைப்பு செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி பேசியதாவது. கடந்த இடைத்தேர்தல்களில், மதுரை மத்திய தொகுதியில், 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும்,மதுரை மேற்கு தொகுதியில் 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், திருமங்கலம் தொகுதியில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம்.
அதே போல ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தலிலும்,41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உழைக்கவேண்டும். தலைவர் கருணாநிதி சொல்வதை போல வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என, கூறுவது இப்போது மாறிவருகிறது. தென்மாவட்டங்களில் 10க்கு 9 என்ற முறையில் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம்.
அதிமுக., பொது செயலாளர் ஜெயலலிதா திமுக.இவை தேர்தலில் விதிமுறை மீறல், மோசடிகள் செய்வதாக கூறியூள்ளார். அப்படி நடந்தால், அதிமுக.,எப்படி 12 இடங்களில் வெற்றி பெற்று இருக்க முடியும். என்னை வரவேற்று டிஜிட்டல் பேனர்கள் வைக்க வேண்டாம். ஏற்கனவே, மதுரையில் டிஜிட்டல் பேனர் வைத்தனால், என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.
அதே போன்று இங்கும் தூத்துக்குடி எம்.பி ஜெயதுரை டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ளார். அதற்கு பதிலாக ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்யவேண்டும். ஜெயதுரை எம்.பியை மாவட்ட செயலாளர் பெரியசாமியும்,திமுக.,தொண்டர்களும் தான் ஜெயிக்க வைத்தனர். இவ்வாறு மு.க.அழகிரி பேசினார்.
கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, சாத்தூர்ராமச்சந்திரன்,சுரேஷ்ராஜன், கீதாஜீவன், பூங்கோதை ஆலடி அருணா, மாவட்ட செயலாளர் பெரியசாமி, நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியன், முன்னாள் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கந்தன்,திருச்செந்தூர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக