வியாழன், 20 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டம் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

ஸ்ரீவைகுண்டம் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சாயர்புரம் போப் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் செவ்வாய்க்கிழமை (ஆக. 18) நடைபெற்றது.

தொகுதியில் 172 வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் மூடி முத்திரையிடப்பட்டு, சாயர்புரம் போப் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டன.

அனைத்து வாக்குச் சாவடிகளில் இருந்தும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் செவ்வாய்க்கிழமை இரவில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்து சேர்ந்தன.

தொடர்ந்து அந்த இயந்திரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர், அனைத்து இயந்திரங்களும் தனி அறையில் வைக்கப்பட்டு, அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய போலீஸôர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், வாக்கு எண்ணும் மையத்திலும், மையத்திற்கு வெளியேயும் என மூன்றடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியர் கோ. பிரகாஷ், மத்திய தேர்தல் பார்வையாளர்கள் டி.கே. ரங்கசாமி, சீனிவாசுலு, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன் ஆகியோர் புதன்கிழமை பார்வையிட்டனர்.

72.46 சதவிகித வாக்குப் பதிவு:

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 57,353 ஆண்கள், 59,254 பெண்கள் என மொத்த வாக்காளர்கள் 1,16,607 பேர்.

இவர்களில் 84,504 வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்தியுள்ளனர். இது 72.46 சதவீதம் ஆகும். ஆண்கள் 40,731 பேர் வாக்களித்துள்ளனர். இது 71 சதவிகிதமாகும். பெண்கள் 43,773 பேர் வாக்களித்துள்ளனர். இது 73.9 சதவிகிதம் ஆகும்.

சராசரி வாக்குப்பதிவான 72.46 சதவிகிதத்திற்கு 15 சதவீதம் கூடுதலாக அல்லது 15 சதவிகிதம் குறைவாக ஏதாவது வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவாகியிருந்தால் அதை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை.

அதன்படி ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 4 வாக்குச் சாவடிகளில் சராசரி வாக்குப்பதிவை விட 15 சதவிகிதம் கூடுதலாகவும், 1 வாக்குச் சாவடியில் சராசரியை விட 15 சதவிகிதம் குறைவாகவும் வாக்கு பதிவாகியிருந்தது.

இந்த 5 வாக்குச் சாவடிகளிலும் நடைபெற்ற வாக்குப் பதிவு விவரங்களை வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் ஆய்வு செய்தார்.

வாக்குப்பதிவின்போது பயன்படுத்தப்பட்ட 17 ஏ படிவம், வாக்குப்பதிவு நிலவரங்களை குறிக்கும் படிவம் உள்ளிட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது மத்திய தேர்தல் பார்வையாளர்கள் டி.கே. ரங்கசாமி, சினிவாசுலு, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், தூத்துக்குடி கோட்டாட்சியர் வீ. வேலாயுதம், தேர்தல் வட்டாட்சியர் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

49 (ஓ): ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 65 பேர் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை எனக்கூறி 49 (ஓ) வசதியை பயன்படுத்தியுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 14 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 13 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பகல் 12 மணிக்குள் முடிவு தெரிந்துவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin