மதுரையில் சமீபகாலமாக விமான சேவை போதிய அளவு இல்லாத காரணத்தால் டிக்கெட் கிடைக்காமல் தினமும் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்.
மதுரை விமான நிலையத்துக்கு கடந்த ஜனவரி வரையில் தினமும் 11 தடவை சென்னை, மும்பை, பெங்களூர் ஆகிய இடங்களிலிருந்து விமானங்கள் வந்து போயின.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் தனியார் விமான நிறுவனம் தனது சேவையை திடீரென நிறுத்தியது. இதனால் மதுரைக்கு தற்போது 8 தடவைதான் விமானங்கள் வந்து போகின்றன.
அதன்படி தினமும் காலையில் சென்னையிலிருந்து 7.45 மணிக்கு வரும் தனியார் விமானம் 8.15 மணிக்கு புறப்பட்டு செல்கிறது.
காலை 8.15 மணிக்கு வரும் தனியார் விமானம் 8.45 மணிக்கு சென்னைக்கு செல்கிறது. மும்பையிலிருந்து சென்னை வழியாக வரும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பகல் 11.15 மணிக்கு மதுரை வந்து மீண்டும் பகல் 1.40 மணிக்கு மும்பை கிளம்பிச் செல்கிறது.
பகல் 1.45 மணிக்கு சென்னையிலிருந்து வரும் தனியார் விமானம் பிற்பகல் 2.15 மணிக்கும், மாலை 4.45 மணிக்கு சென்னையிலிருந்து வரும் விமானம் 5.15 மணிக்கும் சென்னைக்கு கிளம்பிச் செல்கின்றன.
இரவில் சென்னையிலிருந்து 7.45 மணிக்கு வந்த விமானம் இரவு 8.15 மணிக்கு செல்கிறது. இரவு 8.15 மணிக்கு மதுரை வரும் தனியார் விமானம் 8.45 மணிக்கு கிளம்பிச் செல்கிறது.
இந்த விமானங்களில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மட்டும் 140 பயணிகள் பயணிக்கும் வசதி உள்ளது. மற்ற விமானங்களில் 70 பயணிகளே பயணிக்க முடியும்.
பொதுவாக வியாபாரிகள், வெளிநாடு செல்வோர் ஆகியோர் விமானங்களில் பயணித்த நிலையில் சமீப காலமாக சமுதாயத்தில் பலதரப்பினரும் விமானப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், மதுரையில் இருந்து தினமும் குறைந்தது 800 பேர் விமானத்தில் பயணிக்கின்றனர். வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மதுரை விமான நிலையத்திலிருந்து பயணிக்க குறைந்தது 900 பேர் வரையில் முன்பதிவு செய்வதாக விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர். முன்பதிவு செய்வோரில் குறைந்தது 50 பேருக்கு டிக்கெட் கிடைக்காத நிலை தினமும் ஏற்படுவதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன.
தனியார் விமான நிறுவனம் தனது சேவையை சில மாதங்களுக்கு முன் திடீரென நிறுத்தியதால் மதுரையிலிருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகர்களுக்கு 3 தடவைக்கான விமான சேவை நிறுத்தப்பட்டுவிட்டது. விமான சேவை குறைந்ததால் முன்பதிவு செய்வோர் அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தனியார் விமான நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். தற்போது மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்தப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விமானப் பயணிகளது எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் போதிய விமானங்களை இயக்கத் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் குறிப்பாக வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக