முஸ்லீம்கள் மீது அமெரிக்கா இன துவேஷத்தை கடைபிடிப்பதாக இந்திய - அமெரிக்க முஸ்லீம்கள் குற்றம் சாற்றியுள்ளனர்.
சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நியூஜெர்சி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்.கான் என்ற பெயர் இருப்பதை பார்த்து அவர் மீது சந்தேகம் அடைந்த அமெரிக்க குடியுரிமை அதிகாரிகள், 2 மணி நேரம் அவரிடம் துருவித் துருவி விசாரணை நடத்திய சம்பவம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் டெல்லி விமான நிலையத்தில்,அமெரிக்க விமான நிறுவன அதிகாரிகளால் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்காவிலுள்ள இந்திய - அமெரிக்க முஸ்லீம் கவுன்சில் தலைவர் ரஷீத் அகமத்,மேற்கூறிய சம்பவங்கள் மூலம் முஸ்லீம்களுக்கு எதிராக அமெரிக்கா இன துவேஷத்தை கடைபிடிக்கிறது என்பது நிரூபணமாகி உள்ளதாகவும்,இதுபோன்ற இன துவேஷத்தை கடைபிடிப்பதை அனைத்து நாகரீக சமூகங்களும் கைவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் கடைபிடிக்கப்படும் கட்டுப்பாடுகளை திருத்தியமைத்து, அனைத்து தரப்பினரிடத்திலும், அவர்களது மத, இன மற்றும் நிற வேறுபாடுகளை மனதில் கொள்ளாமல் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக