திருநெல்வேலி ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கடையில் கடைகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் மாவட்ட பொதுக் குழு கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் பொதுச் செயலர் எஸ். ஹைதர்அலி தலைமை வகித்தார். மாநில துணைச் செயலர் எஸ். மைதீன் சேட்கான், மாவட்டத் தலைவர் மைதீன்பாரூக், மாவட்டச் செயலர் ஐ. உஸ்மான்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
திருநெல்வேலி மாநகராட்சியில் பணிகள் தேக்கம் இல்லாமல் நடைபெறுவதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியை ஆணையராக நியமிக்க வேண்டும்.
பீடித் தொழிலாளர்களின் குறைகளை களைவதற்கு அவர்களுக்கு தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும். மாநகராட்சியின் வருவாயைப் பெருக்க திருநெல்வேலி சந்திப்பு திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்ப் பகுதியில் கடைகள் அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்கள், கல்விக் கூடங்கள் ஆகியவை அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் அகற்றப்பட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அமைப்பின் பொருளாளர் மிஸ்பாகி, துணைத் தலைவர் ரசூல்மைதீன், துணைச் செயலர் சுல்தான், சர்தார் அலிகான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக