ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் யாதவ சமுதாய வாக்காளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வாக்களிக்கலாம் என இங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு யாதவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டம் ராமானுஜ யாதவ மடத்தில் நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் யாதவர் சங்கத் தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். செயலர் வேலாயுதம், பொருளாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீகிருஷ்ணா நியூ சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் வி.எஸ். ராஜவர்மன் பேசினார்.
தூத்துக்குடி கார்மேகனார் நற்பணி மன்றத் தலைவர் பி. பரமேஸ்வரன், திருச்செந்தூர் தொகுதி யாதவ இளைஞரணிச் செயலர் செல்லப்பா, ஸ்ரீவைகுண்டம் யாதவர் சங்கச் செயற்குழு உறுப்பினர் மாயாண்டி, தமிழ்நாடு யாதவர் முன்னேற்றச் சங்க நிறுவனர் இசக்கிமுத்து, பொருளாளர் எம். குமார், திருமலைபுரம் யாதவர் சங்கத் தலைவர் கே. மாதவ ராமானுஜம், இளையபெருமாள், யாதவர் சமூக விழிப்புணர்வு இயக்கச் செயலர் எம். முத்துக்குமார், கசமுத்து, ஜி. சுந்தரம் நடேசன், இ. துரை, சங்கரன், பேச்சிமுத்து, லட்சுமணன் உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: யாதவர்களை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். யாதவர்கள் வாழ்வின் உண்மை நிலையைக் கண்டறிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அல்லது நீதிபதி தலைமையில் 5 பேர் கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 1 கோடி யாதவர்களின் பிரதிநிதியாக மாநிலங்களவைக்கு 2 உறுப்பினர்களை நியமிக்க அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும்.
கால்நடைகள் வளர்க்க, பால் பண்ணைகள் அமைக்க விவசாயிகளுக்கு வழங்குவதுபோல 4 சதவிகித வட்டியில் வங்கிக் கடன் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் திருச்செந்தூர், சங்கரன்கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட கோயில்களில் அறங்காவலர் குழுத் தலைவர்களாக யாதவர்களை நியமிக்க வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சிகளுடன் உடன்பாடு காண கால அவகாசம் குறைவாக இருப்பதால் ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தலில் யாதவர் சமுதாய மக்கள் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப வாக்களிக்கலாம்.
ஒரு கோடி யாதவர்களின் வாழ்க்கையின் அவல நிலையைக் கண்டறிய 5 பேர் கொண்ட கமிட்டி அமைக்கவும், நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கவும் அகில இந்திய அளவில் யாதவ எம்.பி.க்களை சந்திப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக