முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் முன்பு 1980-ம் ஆண்டு வாக்கில் ராணுவ ஆராய்ச்சி மையத்தில் டைரக்டராக இருந்து வந்தார்.
அப்போது அவரிடம் தமிழ்நாட்டைச் சேர்ந்த கதிரேசன் டிரைவராக இருந்து வந்தார். கதிரேசன் அதற்கு முன்பு ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கதிரேசன் இளம் வயதாக இருந்தபோது அவருடைய தந்தை வெள்ளைச்சாமி தேவர் இறந்து விட்டார். இதனால் 10-ம் வகுப்பு கூட முடிக்காமல் இருந்த கதிரேசன் 1979-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார்.
அவருக்கு போபாலில் ராணுவ எலக்ட்ரிக்கல் மெக்கானிக் பயிற்சி அளித்தனர். நாகலாந்து, சிக்கிம் மாநிலங்களில் பணியாற்றினார். கடைசியாக ராணுவ ஆராய்ச்சி மையத்தில் டிரைவர் பணி வழங்கப்பட்டது.
அப்போது அங்கு டைரக்டராக இருந்த அப்துல் கலாமுக்கு டிரைவராக அமர்த்தப்பட்டார்.
அப்போது அப்துல் கலாம் கதிரேசன் குடும்ப நிலைமைகளை கேட்டறிந்தார். கதிரேசன் 10-ம் வகுப்பு முடிக்காமலேயே ராணுவத்தில் சேர்ந்த கதையையும் கூறினார். அதற்கு அப்துல்கலாம் நீங்கள் ஏன் மேற்கொண்டு படிக்கக்கூடாது என கூறி அவர் மேலும் படிக்கும்படி ஊக்கப்படுத்தினார்.
கதிரேசன் 10-ம் வகுப்பில் ஆங்கில பாடத்தில் தோல்வியுற்று இருந்தார். அந்த பாடத்தை எழுதி “பாஸ்” ஆனார். அடுத்து தனித்தேர்வாக பிளஸ்-2 பாஸ் ஆனார். 1998-ல் கதிரேசன் டிரைவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அடுத்து மதுரை பல்கலைக்கழகத்தில் தபால் மூலம் பி.ஏ. வரலாறு, எம்.ஏ. வரலாறு படித்து முடித்தார். அடுத்து பி.எட்., எம்.எட்டும் முடித்தார்.
பின்னர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் எம்.பில். படித்து, அடுத்து பி.எச்.டி. டாக்டர் பட்டம் பெற்றார்.
இதை தொடர்ந்து அரசு கல்லூரி ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பித்தார். அவரை தேர்வு செய்தனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி பேராசிரியராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
நான் இந்த அளவுக்கு முன்னேறியதற்கு காரணமே அப்துல்கலாம் கொடுத்த ஊக்கம்தான் என்று கதிரேசன் பெருமிதத்துடன் கூறுகிறார்.
அப்துல் கலாமுடன் பணியாற்றிய காலத்தை என்னால் மறக்கவே முடியாது. அவர் யாரிடமும் கடுமையாக நடந்து கொள்ளவேமாட்டார். எல்லோரையும் ஊக்கப்படுத்துவார். அவருடைய வழியில் இளைஞர்களுக்கு நாட்டுப்பற்றை உருவாக்கும் பணியை தொடர்ந்து செய்வேன் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக