திங்கள், 31 ஆகஸ்ட், 2009

பட்டிணி தியாகம்!

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்;

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி(ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்கள், 'எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை" என்று பதிலளித்தார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), 'இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?.".. அல்லது 'இவருக்கு விருந்தளிப்பவர் யார்?.".. என்று கேட்டார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நான் (விருந்தளிக்கிறேன்)" என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) 'இறைத்தூதர்(ஸல்) அவர்களின் விருந்தாளியைக் கண்ணியப்படுத்து" என்று கூறினார். அதற்கு அவரின் மனைவி, 'நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை" என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், 'உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு விளக்கை ஏற்றி (விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து) விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு" என்று கூறினார்.

அவ்வாறே அவரின் மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றிவிட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்துவிட்டார். பிறகு விளக்கைச்சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்துவிட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சென்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு சிரித்துக் கொண்டான் அல்லது வியப்படைந்தான்" என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், 'தமக்கே தேவை இருந்தும் , தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், தம் உள்ளத்தின் கருமித்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களே வெற்றியாளர்கள்" என்றும் (திருக்குர்ஆன் 59:9ம்) வசனத்தை அருளினான்.

ஆதாரம் புஹாரி எண் 3798

இந்த பொன்மொழியில், நபி[ஸல்] அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விருந்தாளியை அழைத்துச்சென்ற அன்சாரித்தோழரின் வறுமை நிலை பாரீர். அவரது வீட்டில் குழந்தைகளுக்கான உணவு மட்டுமே உள்ளது. அன்சாரி தோழருக்கும் அவரது மனைவிக்கும் கூட அங்கே உணவில்லை. இந்த நிலையிலும், தனது குழந்தைகளை தூங்கவைத்து விட்டு குழந்தைகளின் உணவை அந்த விருந்தினருக்கு வழங்கி தனது வள்ளல் தன்மையை காட்டிய அந்த அன்சாரித்தோழர் அவர்களின் வாழ்க்கையே தியாகமாக இருந்தது.

அதனால் அல்லாஹ் ஒரு வசனத்தையே இறக்கி இந்த தோழரின் ஈகை குணத்தை கண்ணியப்படுத்தி, இத்தகைய குணமுடையவரே வெற்றியாளர்கள் என்று தன் அருள்மறையில் கூறும் அளவுக்கு அன்சாரித்தோழரின் வாழ்க்கை அமைந்ததை பார்த்து உள்ளபடியே இத்தகைய நற்குணத்தை நாமும் பெறவேண்டும் என்ற சிந்தனை நம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.

ஆனால் இன்று நடப்பதென்ன? நமது வீட்டிற்கு நமது உறவினர்கள் யாரேனும் வந்துவிட்டால் அவனை பார்த்த மாத்திரமே 'வந்துட்டான்யா வந்துட்டான்யா' என்று மனதில் கருவும் எத்துணையோ பேரை பார்க்கிறோம். வந்த விருந்தாளியை வேண்டா வெறுப்பாக கவனிப்பதையும் 'எப்படா எடத்த காலி பன்னுவான்' என்று நினைப்பவர்களையும் பார்க்கிறோம். கணவனின் உறவினர்கள் வந்துவிட்டால் மனைவிக்கு எரிகிறது.

மனைவியின் உறவினர்கள் வந்துவிட்டால் கணவனுக்குஎரிகிறது. இவ்வாறான மன நிலையுள்ளவர்கள் இன்றைய நவீன உலகில் இருக்க, அன்றோ யார் என்றே தெரியாத ஒருவருக்கு விருந்தளித்து கண்ணியப்படுத்திய அன்சாரித்தோழரின் வாழ்வில் நமக்கு மிகப்பெரிய படிப்பினை உள்ளது.

நன்றி:சஹாபாக்களின் வாழ்வினிலே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin