அஸ்ஸலாமு அலைகும் வ ரஹ்மதுல்லாஹ்
எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது.அவனின் சலாத்,சலாம்,பரக்கத் நம் உயிர்களைவிட உயர்ந்த மதிப்புள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் மீதும்,அவர்களின் குடும்பத்தினர்,தோழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது ஏற்படட்டும்.
நபி (ஸல்) நவின்றார்கள் :
நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் ஏழு கூட்டத்தாருக்குத் தனது பிரத்யேகமான நிலை வழங்குகின்றான் :
1. நீதி தவறாத தலைவன்
2. இறைவனை இபாதத் செய்வதில் வளர்ந்த வாலிபன்
3. இறையில்லத்துடன் தொடர்புபட்ட மனிதன்
4. இறைவனுக்காக நேசம் கொண்டு அவனுக்காகவே பிரிந்த இரு மனிதர்கள்
5. அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் (தூநடத்தைக்காக) அழைத்த போது, நான் இறைவனை அஞ்சுகின்றேன் என்று கூறிய மனிதன்
6. தமது வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாத வகையில் தர்மம் புரிந்த மனிதன்
7. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் விடும் ஒரு மனிதன்
அறிவிப்பவர் : அபூஹ{ரைரா (ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.
பொதுவாகவே அல்குர்ஆன் வசனங்களும் நபி மொழிகளும் மறுமை நாளில் மஹ்ஷர் வெளியில் மனிதர்களின் திண்டாட்டம் பற்றிக் கூறி இதயங்களை பற்றியிழுக்கின்றன. நபிமொழியொன்று மஹ்ஷரை இப்படிப் படம் பிடித்துக் காட்டுகிறது.
அந்நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு மிக அருகாமையில் கொண்டு வரப்படும். மனிதர்கள் தங்களின் செயற்பாடுகளுக்கேற்ப வியர்வையில் மூழ்கியிருப்பர். அவர்களுள் சிலரின் கரண்டைக் கால் வரையும், வேறு சிலரின் முழங்கால் வரையும், மற்றும் சிலரின் இடுப்பு வரையும், இன்னும் சிலரின் வாய் வரையும் வியர்வை மூடியிருக்கும் (முஸ்லிம்)..
இவ்வாறு மனிதர்களின் திண்டாட்டத்தை நபிமொழி சித்தரிக்கின்றது. இவ்வாறான இக்கட்டான நிலைமையில் இறை நிழலில் குளிர்காய இடம் கிட்டுமானால் அது அள்பபரிய பாக்கியமாகும்.
முஸ்லிம் நீதிமிக்கவன்.
இஸ்லாம் நீதிக்கு மிகவும் தெளிவாகச் சான்று பகர்கின்றது. குர்ஆன் இப்படிக் கூறுகின்றது:
முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். (4:135)
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் :
மூன்று பிரிவினர் சுவனவாசிகள் ஆவர். அதில் ஒருவர் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நீதியாக நடக்கும் ஆட்சியாளன் (முஸ்லிம்).
நீதியை நிலைநிறுத்தும் தலைவருக்கு நிழலில்லாத நாளில் நிழல் கிடைக்கும் என்பது உறுதியே.
வாலிபம் ஓர் அருள்
வாலிபம் என்பது இறைவன் தந்த அருள். அது இறைவழியில் பயன்படுத்தப்பட வேண்டும். வாலிபம் உற்சாகத்தினதும் வேட்கையினதும் பருவமாகும். எனவே, இவ்வாலிபம் இறைமறையின் புரட்சிக்காய் அதன் சமூகப் புரட்சியை ஏற்படுத்துவதற்காய் தன்னிலும் மண்ணிலும் இறைபோதனைகள் வளர்வதற்காய் வாழுமானால் இவ்வாலிபம் நிழலுக்குச் சொந்தமாகும் என்பது இறைவழி காட்டும் உண்மையாகும்.
இறையில்லத் தொடர்பு
இறைவனது இல்லத்தோடு தொடர்பு வைத்துள்ள உள்ளங்களுக்கு இறையருள் உண்டு. மனிதன் தனது விவகாரங்களை இறையில்லத்துடன் தொடர்புபடுத்த வேண்டும். அமைதியற்ற வேளையில் இறையில்லத்தில் அமர்ந்து இறைவனைச் சிந்தியுங்கள். அமைதியின் பூங்காவாக மஸ்ஜிதை உணர்வீர்கள். மஸ்ஜிதின் வளர்ச்சியிலும், ஒழுங்கமைப்பிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வது இறைநிழலுக்குச் சொந்தக்காரனாக மாற்றி விடுகிறது.
இறைவனுக்காக நேசம் கொள்ளல்
நேசம் என்பது இறைவனுக்காகவே இருக்க வேண்டும். குறிப்பாக, இஸ்லாமிய இலட்சியவாதிகளுக்க இப்பண்பு ன்றியமையாததாகும்.இறைவனுக்காக அமையும் நட்பும், பிரிவும் அர்ஷின் நிழலுக்குச் சொந்தம் பெற்றுத் தரும்.
இறையச்சம்
இறையச்சமே மனிதனை இழிவான ஒழுக்க வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கும் சிறந்த சாதனமாகும். நிழலில்லாத நாளின் நிழலுக்குத் துணைபுரியும்.
தருமம் செய்தலும் இறைதிருப்தியும்
இறைவனுக்காக கொடுக்கப்படுகின்ற தர்மத்திற்கு கூலியிருக்கிறது. வலக்கரம் கொடுப்பதை இடக்கரம் அறியாது. இறைவனுக்காக வழங்கப்படும் தருமம் மறுமையில் நிழலின் சொந்தக்காரர்களாக மாற்றும்.
ஒரு சொட்டுக் கண்ணீர்
முஹாஸபா (சுயவிசாரணை) ஒரு முஸ்லிமின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாகும். வாழ்க்கையின் முன்னேற்த்திற்கும், அனுபவத்திற்கும் தவ்பாவிற்கும் சிறந்த ஊடகமாக சுயவிசாரணை அமைகிறது. ஒரு மனிதன் தனிமையில் தனது வாழ்வில் தான் நடந்து வந்த பாதையை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இங்கு கூறப்பட்ட இறை நிழலுக்குச் சொந்தமானவர்களின் உள்ளங்கள் இறைவனோடு தொடர்புபட்டுள்ளது.வாருங்கள் மிக்க கொடுமையும் கருமையும் நிறைந்த மஹ்ஷர் வெளியின் வெப்பத்திலிருந்து எம்மைக் காப்பாற்ற முயற்சிப்போம்! அர்ஷின் நிழலில் குளிர்காய விழைவோம்!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக