செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டம் தேர்தல் பணியாளர்களுக்கு முதல் கட்ட பயிற்சி

ஸ்ரீவைகுண்டம் தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றவுள்ள தேர்தல் பணியாளர்களுக்கான முதல்கட்ட பயிற்சி தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை தொகுதியில் வரும் 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக தொகுதியில் 172 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.

இதில் பணியாற்ற 830 மத்திய அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், 112 நுண் பார்வையாளர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் பணியாளர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பு தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மக்கள் நல திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காலையில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், நுண் பார்வையாளர்களுக்கும், மாலையில் வாக்குச்சாவடி அலுவலர் நிலை- 1 பணியாளர்களுக்கும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்த பயிற்சியை தொடங்கிவைத்து மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ் பேசியதாவது:

பொதுத் தேர்தலுக்கும், தற்போது நடைபெறும் இடைத்தேர்தலுக்கும் சில முக்கிய வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக இடைத்தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மத்திய அரசு மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனங்களின் ஊழியர்கள் தேர்தல் பணியாளர்களாக பணியாற்றவுள்ளனர்.

அதேபோல நுண் பார்வையாளர்களாகவும் மத்திய அரசுப் பணியாளர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

விருப்பு- வெறுப்பின்றி தேர்தல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜனநாயக மரபைக் காக்கும் மிகப்பெரிய பொறுப்பை தேர்தல் பணியாளர்களாகிய நீங்கள் செய்யவுள்ளீர்கள். தேர்தல் நாளில் வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து முடியும் வரை மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

இதில் ஏதாவது ஒரு கட்டத்தில் தவறு நடந்தாலும் பின்னர் பிரச்னையாகும். வாக்கு எண்ணும்போது தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தும்.

உங்களது அதிகாரம் என்ன, பணி பொறுப்புகள் என்ன என்பது குறித்து இப்பயிற்சியில் தெளிவாக விளக்கப்படும். அதைப் புரிந்துகொண்டு தேர்தல் பணியாற்ற வேண்டும்.

மக்கள் வாக்களிக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தலில் முதுகெலும்பு போன்றது. எனவே, அதன் செயல்பாடுகளை முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றார் ஆட்சியர்.

தொடர்ந்து தேர்தல் பணிக்காக தேர்வு செய்யப்பட்ட அனைவரும் தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து முழுமையாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த பயிற்சியில் தேர்தல் பார்வையாளர் டி.கே. ரங்கசாமி, தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன், தூத்துக்குடி கோட்டாட்சியர் வீ. வேலாயுதம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் பரமசிவம், தூத்துக்குடி வட்டாட்சியர் பூமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

2-ம் கட்ட பயிற்சி வகுப்பு இம்மாதம் 12-ம் தேதியும், 3-ம் கட்ட பயிற்சி வகுப்பு 16-ம் தேதியும் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin