வியாழன், 27 ஆகஸ்ட், 2009

சித்திரவதை செய்து தமிழர்களை கொன்றது இலங்கை ராணுவம்: விடியோ ஒளிபரப்பு


தம்மிடம் சிக்கிய ஒன்பது தமிழர்களை சித்திரவதை செய்து ஈவிரக்கமில்லாமல் இலங்கை ராணுவ வீரர்கள் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் கடந்த ஜனவரியில் நடந்துள்ளது. விடியோவில் பதிவான இந்த கொடூர சம்பவத்தை பிரிட்டனைச் சேர்ந்த "சானல் 4' தொலைக்காட்சி புதன்கிழமை ஒளிபரப்பு செய்துள்ளது.

அந்த ஒன்பது பேரும் சித்திரவதை செய்து கொல்லப்படுவதை ஒரு ராணுவ வீரரே தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். அந்த விடியோ, ஜனநாயக ஆதரவு பத்திரிகையாளர்கள் அமைப்பு மூலம் சானல் 4 தொலைக் காட்சிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விடியோ காட்சி நிஜமானதல்ல என்றும் இத்தகைய ஈவிரக்கமற்ற கொடிய செயலில் தமது ராணுவம் ஈடுபடவில்லை என்றும் இலங்கை மறுத்துள்ளது.

சானல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய விடியோ காட்சியை அடுத்து கொழும்புக்கு எதிராக கூறப்பட்டு வந்து போர்க்குற்றப் புகார்கள் சூடு புடித்துள்ளன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான உச்சகட்ட போரின்போது பிடிபட்ட புலிகளை ஈவிரக்கமின்றி சித்திரவதைக்குள்ளாக்கி இலங்கை ராணுவம் கொன்று வருவதாக மனித உரிமைகள் அமைப்பும் இலங்கைத் தமிழர்களும் புகார் கூறிவந்தனர்.

சமாதானம் பேசுவதற்காக வெள்ளைக்கொடி பிடித்தபடி வந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் பாலசிங்கம் நடேசன் மற்றும் மற்றொரு தலைவர் சீவரத்தினம் பூலிதேவன் ஆகியோரை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்றதாக மே மாதத்தில் செய்திகள் வெளியாகின.

தலைப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டுக்கிடந்த புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடல் இருக்கும் படத்தை அரசே தனது விடியோவில் வெளியிட்டது.

இலங்கைக்கு எதிரான போர்க்குற்றப் புகார்கள் உண்மைதான் என்பதை சானல் 4 ஒளிபரப்பிய விடியோ நிரூபிப்பது போல அமைந்துள்ளது என்று தி டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனவரியில் கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளை ஒடுக்கி நிர்மூலமாக்கிய இலங்கை ராணுவம், பிடிபட்ட போர்க்கைதிகளை ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்து கொன்றதை ராணுவ வீரர் ஒருவரே தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார் என்று இந்த விடியோவை ஒளிபரப்பிய சானல் 4 தொலைக்காட்சி கூறியுள்ளது.

ஆனால் இந்த விடியோ காட்சியை தமக்கு எதிரான அவதூறு புகார் என்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு எதிராக எந்த கொடிய சித்திரவதை செயல்களிலும் ராணுவம் ஈடுபட்டதில்லை. விடியோவில் தில்லுமுல்லு செய்தும் பொய்யான ஆவணங்களையும் வெளியிட்டு இலங்கைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்கள் கடந்த காலங்களில் பல முறை நடந்துள்ளன. எனவே இந்த விடியோ பற்றி தீர ஆராய்ந்து உண்மையை உறுதி செய்யவேண்டும் என்று லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.


ஆனால், இந்த விடியோ காட்சிகள் போலியானவை என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin