செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

தமிழகத்தில் முதல்முறையாக ஆன்லைன் மூலம் மனு: நெல்லையில் அறிமுகம்


தமிழகத்தில் முதல்முறையாக ஆன்லைன் மூலம் மனுக்களை பதிவு செய்யும் புதிய முறையை திருநெல்வேலியில், அமைச்சர் மைதீன்கான் துவக்கி வைத்தார்.

பொதுமக்கள் தங்கள் குறைகளை வாரந்தோறும் திங்கள் கிழமைகளில், மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று மனு அளித்து வருகின்றனர். மனுக்கள் அனைத்தும் மேல் நடவடிக்கைக்காக சம்பந்தபட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் ஊரிலிருந்து மாவட்ட தலைநகருக்கு வந்து மனுக்களை அளிக்க வேண்டியுள்ளது. ஆனால் தங்களது மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் பற்றியோ, மனுக்களின் தற்போதைய விபரம் பற்றியோ எளிதில் தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட வில்லை.

இந்நிலையில், பொதுமக்களின் வீண் அலைச்சலை தவிர்க்கும் விதமாக ஒரு புதிய முறையை, நெல்லை மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின் பேரில், மத்திய அரசினை சார்ந்த தகவல் தொழில் நுட்ப துறையின் கீழ் இயங்கும், தேசிய தகவலியல் மையம் (National Informatics Centre) ஒரு இணையதள சேவையை செய்துள்ளது. இந்த புதிய இணையதள சேவையின் மூலம், நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட இணையதளம் மூலம் பொதுமக்கள் எளிதில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதியின் மூலம், பொதுமக்கள் கோரிக்கைகளை மற்றும் குறைகளை சம்பந்தபட்ட வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி ஆகியோரிடம் நேரிடையாக அளித்து, மனுக்கள் மீதான ஒப்புகைச் சீட்டினை பெற்றுக்கொள்ளலாம். மாவட்ட ஆட்சித்தலைவர் கணினி மூலம், நேரடியாக அனைத்து மனுக்கள் மீதான நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை எளிதில் ஆய்வு செய்யலாம். இதனால் பொதுமக்களுக்கு காலதாமதமின்றி எளிதில் தீர்வு ஏற்படும்.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அமைக்கப்பட்டுள்ள www.nellai.tn.nic.inஎன்ற இணையதள முகவரியில் “Public Grievances Online” என்ற் பகுதிக்குச் சென்று பொதுமக்கள் இந்த வசதியினை எளிதில் பெற்றுக் கொள்ளலாம். இதற்காக ரூ.10லட்சம் மதிப்பிலான “புதிய பொது சேவை மையம்” மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில், நெல்லை மாவட்ட ஆட்சியர் ஜெயராமன், மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை அருணா, சட்ட மன்ற உறுப்பினர்கள் கருப்பசாமி பாண்டியன், அப்பாவு, மாலை ராஜா, திருநெல்வேலி மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செல்வா, திருநெல்வேலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin