1940 ஆம் ஆண்டில் இன்றைய சென்னை மெட்றாசாக இருந்தது.
அந்தக் கால மதராஸின் பகுதிகள் ஜார்ஜ் டவுன், பார்க் டவுன் என்றெல்லாம் அழைக்கப்பட்டன. மவுண்ட் ரோட்டில் இப்போது போல மக்கள் நடமாட்டம், நெருக்கடிகள், போக்குவரத்து நெரிசல்கள் அப்போது இல்லை. குறுக்கும் நெடுக்குமாக யார் வேண்டுமானாலும் போகலாம். பஸ்கள் கூட எப்போதாவதுதான் வரும்.
1940களில் பெட்ரோல் பஞ்சம் சில காலம் இருந்து வந்தது. பஸ்கள் பின்னால் ஒரு பெட்டியை நிறுவி அதற்குள் கரி நிரப்பி தீ மூட்டி புகை கக்கும்படி செய்து வந்தார்கள். அந்த சூட்டில் பஸ்கள் செல்லும். பஸ் கண்டக்டர் கரிப் பெட்டியை சுழற்றுவார். "சுந்தரம் மோட்டார்ஸ்' நிறுவனம் மட்டுமே பஸ்களை இயக்கி வந்தது. அரசு பஸ்கள் அப்போது இல்லை
இதுதவிர ட்ராம் போக்குவரத்து இருந்தது. மிக மெதுவாக செல்லும் இந்த வண்டிகளில் நடந்து கொண்டே ஏறி போகும்போதே இறங்கி பயணிப்பது மதராஸ்வாசிகளுக்கு ஒரு தனி சுகம். எழும்பூரில் இருந்து ஐகோர்ட் செல்ல டிராம்மில் கட்டணம் 2 அணா. இரு பக்கமும் கண்டக்டர் இருப்பார்.
மாம்பலம், தியாகராய நகர் போன்ற பகுதிகளில் வசதியானவர்கள் குடியிருப்பார்கள். இப்போதும் இருக்கும் சில பெரிய பழங்கால கட்டிடங்கள் அன்றைய நாகரிகத்தின் சின்னமாக இருந்தன. பிரபல சினிமா நடிக நடிகையர் தி.நகர், அடையாறு போன்ற இடங்களில்தான் வசித்து வந்தனர். பிற பகுதிகளில் ஓடு போட்ட வீடுகள், கூரை வீடுகள் அதிகம் இருக்கும். பல பகுதிகளில் தெருக்கள் முள் செடிகள் முளைத்து குண்டும் குழியுமாகவே இருக்கும்.
உயர்நீதிமன்றம் அருகேயுள்ள ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம், அம்பீஸ் கபே போன்ற உணவு விடுதிகள் மிகப் பிரபலம். ஒரு அணாவுக்கு இரு போண்டாவும், இரண்டு அணாவுக்கு தோசையும், 1 ரூபாய்க்கு சாப்பாடும், 2 ரூபாய்க்கு கேரியர் சாப்பாடும் கிடைக்கும். 16 அணா ஒரு ரூபாய் ஆகும். பஜ்ஜி, மைசூர் பாகு, ஜாங்கரி, கேசரி போன்ற பலகாரங்கள் மிகப் பிரபலம்.
இந்தியா சுதந்திரம் அடையும் வரை, மதராஸில் பொழுதுபோக்க மெரினா பீச்சும், சினிமா தியேட்டரும் உண்டு. மாலை நேரத்தில் பீச்சுக்கு சென்றால் மிக சுத்தமாக இருக்கும். இங்கு பெரியவர்கள் இந்திய சுதந்திரத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். சினிமா தியேட்டரில் படம் பார்க்க கட்டணம் 25 காசு. ஹிந்தி, ஆங்கிலப் படம் அதிகம் போடுவார்கள். அண்ணா சிலை எதிர்புறம் மாடியில் நியூ எல்பில்ஸ்டன் தியேட்டர் உண்டு. 50 பேர் உட்கார்ந்து படம் பார்க்கலாம். ஆங்கிலேயர்கள் சாரட் வண்டியில் இங்கு படம் பார்க்க வருவார்கள்.
ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் அதிகமிருந்த காலம் அது. அதனால் நம் மக்கள் நாட்டு விடுதலையைப் பற்றிப் பகிரங்கமாக பேசமாட்டார்கள். போலீசார் தடியடிப் பிரயோகம் செய்வார்கள் என்ற பயம் அவர்களுக்கு இருந்தது.
"வந்தே மாதரம்' என்று சொல்லக் கூட அஞ்சினார்கள். செய்திப் பத்திரிக்கைகளில் கூட பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக பெரிய அளவில் செய்திகள் அவ்வளவாக போடுவதில்லை.
ஆனால் "தினமணி' நாளிதழ் ஆரம்பித்த உடன் இரண்டு தேசியக் கொடிகளை பத்திரிகையின் சின்னமாகத் துணிந்து பயன்படுத்தினார்கள். ராம்நாத் கோயங்கா தீவிர தேசபக்தர். அந்த உணர்வை அப்படியே தினமணி பிரதிபலித்தது. தேசிய நாளேடு என்ற தகுதியை வாசகர்களிடையே அப்போதே பெற்றது.
சில நாடக நடிகர்களுக்கு தேச பக்தி உணர்ச்சி இருந்தாலும் அவற்றை மேடைகளில் வெளிப்படுத்த முடியாமல் நாடகங்கள் போட்டு வந்தார்கள். டி.கே.எஸ். சகோதரர்கள் "தேச பக்தி' என்ற நாடகத்தை மேடை ஏற்றினார்கள். பாஞ்சால சிங்கம் பகத் சிங் வாழ்க்கையை மறைமுகமாக வெளிப்படுத்திய இந்த நாடகத்தைப் போட்டபோது அதற்கு போலீசார் தடை விதித்து விட்டார்கள். நமது நாடு விடுதலை அடைந்த பிறகு மீண்டும் அந்த நாடகத்தை அவர்கள் நடத்தினார்கள்.
1947 ஆகஸ்ட் 15-ல் நாடு விடுதலை அடைந்தபோது தெருக்களில் ஒரு புதிய விழிப்புணர்வு ஏற்பட்டதை காணமுடிந்தது. பெரும்பாலான வீடுகளில் தீபாவளி கொண்டாடுவதுபோல் எண்ணெய் தேய்த்து குளித்து கதரில் புத்தாடை அணிந்து தெருக்களில் வெடி வெடித்து மகாத்மா காந்திக்கு ஜே என்று ஆரவாரம் செய்தார்கள். மயிலாப்பூரில் வசித்த தேசபக்த நடிகர் கே. சாரங்கபாணி போன்ற நடிகர்கள் மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளில் ஊர்வலமாக வந்து கொண்டாடினார்கள்.
சுகுண விலாஸ் நாடக சபா அப்போது பிரபலம். பம்மல் சம்பந்த முதலியார் நாடகங்களை அவர்கள்தான் போடுவார்கள்.
பிரபல நாடகக் கம்பெனிகளின் நாடகங்கள் தொடர்ந்து நடக்கும். பாய்ஸ் கம்பெனி நாடகங்களைப் பார்த்து வெளியூர்களிலிருந்து எல்லாம் வருவார்கள்.
தியாகராஜ பாகவதர்தான் அன்றைய சூப்பர் ஸ்டார். அவர் எப்போதாவது மவுண்ட் ரோடுக்கோ, ஜார்ஜ் டவுனுக்கோ கடைத் தெருவுக்குத் துணிமணி மற்றும் நகைகள் வாங்க வருவார். அப்படி வருவதாக இருந்தால் 15 நாள் முன்னதாக அவர் கமிஷனர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அரசு உத்தரவே போட்டது. மவுண்ட் ரோடின் இரண்டு பக்கங்களிலும் தடுப்புகள் வைக்கப்படும். அந்த அளவுக்குக் கட்டுக்கடங்காத ரசிகர் கூட்டம் அவரைப் பார்க்கக் கூடும்.
சிவாஜி, எம்.ஜி.ஆர். போன்றவர்கள் ஆயிரம் விளக்கு கபேயில் காபி சாப்பிட வந்து நான் பார்த்திருக்கிறேன். மூவிலாண்ட் என்கிற பெயர்ப் பலகையுடன் ஜெமினி ஸ்டூடியோ இருந்தது. ஸ்டூடியோ வாசலில் நடிகர்களை வேடிக்கை பார்க்க எப்போதும் ஒரு கூட்டம் நின்றபடி இருக்கும். இப்போதுபோல நடிகர்கள் பிகு பண்ணிக் கொள்ளமாட்டார்கள். பந்தாவே இல்லாமல் பழகுவார்கள்.
பிரபல நடிகைகள் தாங்களே காரை ஓட்டிக் கொண்டு போவதை வாயைப் பிளந்தபடி பார்க்கும் அப்பாவி ரசிகர்கள் கோடம்பாக்கம் லிபர்ட்டி தியேட்டர் அருகில் இருந்த ரயில்வே கேட்டில் தவமிருப்பார்கள். இப்போது அங்கே மேம்பாலம் வந்துவிட்டது.
மதராஸ் இன்று சென்னையாக மாறிவிட்டாலும் ஒரு சில அன்றுபோல் இன்றும் மாறாமல் உள்ளன. உயர்நீதிமன்றத்தின் சிவப்பு வண்ணம், ஐய்யே போன்ற பேச்சு மொழிகள். அன்றுபோல் இன்றும் நடைபெறும் குழாயடிச் சண்டை போன்றவைகள் மதராசில் தனித் தன்மைகள் போலும்.
ஓடாத ஆறு ஒன்று சென்னையில் அன்றும், இன்றும் உள்ளது. ஆறு என்றால் தண்ணீர் ஓடும். குளத்தில் தண்ணீர் தேங்கும். ஆனால் சென்னையில் உள்ள கூவம் ஆறு நான் பார்த்த நாள் முதலாய் அன்றும், இன்றும் சாக்கடை தேங்கியே உள்ளது.
-நவீனன்
அன்று அண்ணாசாலை இன்று அண்ணாசாலை
சென்னையில் முதல் ஆங்கிலேய மருத்துவமனை புனித ஜார்ஜ் கோட்டையில் கவர்னர் எட்வர்ட் வின்டர் என்பவரால் 1664 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. வாடகை இடத்தில் சிறியதாகத் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை அங்கே இங்கே என்று கோட்டைக்குள் சுற்றி, பிறகு ஆர்மேனியன் தெரிவில் (அரண்மனைக்கார தெரு) பல காலம் செயல்பட்டு வந்தது.
அக்டோபர் 15, 1772ல் ஜான் சுல்லிவன் என்பவரால் எழுப்பப்பட்டதுதான் இன்றைய பொது மருத்துவமனை. 1859 மற்றும் 1893ல் இந்தக் கட்டடம் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. சென்னை பொது மருத்துவமனையில் இப்போதும் காணப்படும் பழைய கட்டடம் "செமினார் ஹால்' என்று அழைக்கப்படும் 1835 ஆண்டு கட்டப்பட்ட பகுதி மட்டுமே. ஏனைய இடங்கள் இடித்துக் கட்டப்பட்டவைதான்.
இந்தியாவின் முதல் ரயில் பாதை, சிந்தாதிரிப்பேட்டை பாலத்துக்கு அருகில்தான் 1836-ல் பரிசோதனைக்காகப் போடப்பட்டது. அடுத்த வருடமே, ஏ.பி. காட்டன் என்பவரால் ரெட் ஹில்ஸ் பகுதியிலிருந்து பரங்கிமலையை அடுத்த கல்குவாரிகள் வரை ஒரு ரயில் பாதை போடப்பட்டது. இந்த ரெட் ஹில்ஸ் ரயில்வே என்பது காற்றழுத்தத்தாலும், மனிதர்கள் தள்ளுவதாலும் இயக்கப்பட்டதாம்!
1845-ல் மெட்றாஸ் ரயில்வே கம்பெனி எனப்படும் நிறுவனம் இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. 1849-ல் இன்னொரு நிறுவனமும் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம்தான் தென்னகத்தின் முதல் ரயில்வே பாதையை நிறுவியது. 1853-ல் கர்னாடிக் நவாபுகளின் தலைநகரமான ஆற்காடையும், வாலாஜாபேட்டையையும் வட சென்னையிலுள்ள ராயபுரத்துடன் இந்த ரயில் பாதை இணைத்தது.
சென்ட்ரல் ரயில் நிலையம், 1873-ல் வியாசர்பாடி மெட்ராஸ் பாதை போடப்பட்டபோது நான்கே நடைமேடையுடன் கூடிய சிறிய ரயில்நிலையமாகத் தொடங்கப்பட்டது. 1907 வரை சென்னையின் தலைமை ரயில் நிலையமாகத் திகழ்ந்தது ராயபுரம்தானாம்.
இப்போதைய சென்ட்ரல் ரயில் நிலையக் கட்டடம் ஜார்ஜ் ஹார்டிங்ஸ் என்பவரால் வடிவம் கொடுக்கப்பட்டு சிஷோம் என்பவரால் பொலிவு ஏற்படுத்தப்பட்டது. ரயில் நிலையத்தில் இருக்கும் மணிகூண்டு தயாரிக்கப்பட்ட வருடம் 1874. கட்டடம் முழுமையான ஆண்டு 1900. அதற்குப் பிறகு பல மாற்றங்கள் அந்தக் கட்டடத்தில் செய்யப்பட்டன என்றாலும், ஜார்ஜ் ஹார்டிங்ஸ் கற்பனை செய்த அதே வடிவம் இப்போதும் மாறாமல் இருக்கிறது என்பதுதான் சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தனிச் சிறப்பு!
தகவலுக்கு நன்றி : தினமணி ஆசிரியர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக