ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தல் தூத்துக்குடியில் வேட்பாளர்கள் ஆலோசனை கூட்டம்

ஸ்ரீவைகுண்டம் இடைத்தேர்தலில், தேர்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பாக அனைத்து வேட்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கோ. பிரகாஷ் தலைமை வகித்தார்.

தேர்தல் பார்வையாளர் டி.கே. ரங்கசாமி இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு வேட்பாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் த. செந்தில்குமார், ஸ்ரீவைகுண்டம் தொகுதி தேர்தல் அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் துரை. ரவிச்சந்திரன் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஞா. தனலட்சுமி, தே.மு.தி.க. வேட்பாளர் மா. செüந்திரபாண்டியன் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தேர்தல் பிரசாரத்தின் போது கடைப்பிடிக்க வேண்டிய நடத்தை விதிகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக வேட்பாளர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டன.

தேர்தல் செலவுகளை வேட்பாளர்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

புதிய தேர்தல் பார்வையாளர்:

ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு தேர்தல் பார்வையாளராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ஆர். உமாசங்கர் என்பவரை தேர்தல் ஆணையம் நியமித்தது.

ஆனால், அவர் தொகுதிக்கு வரவில்லை. இதனால், கடந்த 30ம் தேதி தேர்தல் பார்வையாளர் இல்லாமல் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து அதே கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான டி.கே. ரங்கசாமி என்பவரை தேர்தல் பார்வையாளராக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவர், சனிக்கிழமை தூத்துக்குடிக்கு வந்து பணிகளை தொடங்கினார்.

காலையில் மண்டல அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், மாலையில் அனைத்து கட்சி வேட்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin