குஜராத்தில் இந்த ஆண்டும் முஸ்லீம் மாணவ, மாணவியர் 50,000 பேருக்கு மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் மறுக்கப்பட்டுள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த சர்ச்சையால் முதல்வர் நரேந்திர மோடிக்கு புதுப் பிரச்சினை உருவாகியுள்ளது.
சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசு ஸ்காலர்ஷிப் உதவியை வழங்குகிறது. சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த ஏழை, மாணவ, மாணவியர் பள்ளிப் படிப்பை முடிப்பதற்காக இந்த உதவி செய்யப்படுகிறது.
இந்த ஸ்காலர்ஷிப் தொகையில், 75 சதவீதத்தை மத்திய அரசும், 25 சதவீதத்தை மாநில அரசும் ஏற்கின்றன. அனைத்து மாநிலங்களிலும் இப்படித்தான் உள்ளது. ஆனால் குஜராத்தில் மட்டும், 25 சதவீத பங்கை ஏற்க முடியாது என்று மோடி அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் இங்கு மட்டும் ஸ்காலர்ஷிப்பை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழை முஸ்லீம் சமுதாய மாணவர்களுக்கு மட்டும் ஆண்டு தோறும் ரூ. 22 லட்சம் உதவித் தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதில் குஜராத்துக்கு மட்டும் ரூ. 57 ஆயிரத்திற்கும் கூடுதலாக வழங்கப்படுகிறது.
ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சம் அல்லது அதற்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லீம் மாணவர் அல்லது மாணவி இந்த ஸ்காலர்ஷிப் பெறத் தகுதி படைத்தவர் ஆவார். அழருக்கு ரூ. 800 முதல் ரூ. 1500 வரை ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.
கடந்த ஆண்டு இந்த ஸ்காலர்ஷிப்பை எதிர்த்து மத்திய அரசுக்கு மோடி அரசு ஒரு கடிதம் எழுதியது. அதில் இப்படி இனம் பார்த்து நிதியுதவி செய்வது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று கூறப்பட்டிருந்தது. மேலும் கடந்த ஆண்டு மத்திய அரசின் இந்த ஸ்காலர்ஷிப் உதவியை யாருக்கும் தராமல் விட்டு விட்டது குஜராத் அரசு.
இந்த ஆண்டும் இதுவரை ஸ்காலர்ஷிப் உதவியை யாருக்கும் வழங்கவில்லை மோடி அரசு. இதனால் முஸ்லீம் ஏழை, மாணவ, மாணவியருக்கு மத்திய அரசின் உதவி கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மோடி அரசின் செயல் அரசியல் சட்டவிரோதமானது என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், இது பிரதமரின் 15 அம்சத் திட்டங்களில் ஒன்று. சிறுபான்மையினர் மேம்பாட்டை கருத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம். அனைத்து மாநிலங்களும் இதை ஏற்றுள்ளபோது, குஜராத் மட்டும் எதிர்ப்பது நியாயமல்ல என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக