வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

சென்னைக்கு அக்டோபர் 2-ந்தேதி முதல் “கடல்” குடிதண்ணீர்; மீஞ்சூரில் பணிகள் முடிந்தது


சென்னை குடிநீர் பிரச்சினையை சமாளிக்க கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த முடிவு செய்தது. இதன்படி வடசென்னை பகுதிக்கு குடிநீர் வழங்க மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

தென்சென்னை பயன் பெறும் வகையில், நெமிலியில் கடல்நீரை குடிநீர் ஆக்கும் ஆலை உருவாகி வருகிறது. கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்துக்காக, மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ரூ.871.24 கோடி வழங்குகிறது.

கடல்நீரில் இருந்து குடிநீர் தயாரித்து சென்னைக்கு வழங்கும் திட்டத்தின் முதல் பகுதியாக, மீஞ்சூரில் குடிநீர் ஆலை அமைக்கப்பட்டது. இதன் பணிகள் பெரும் பாலும் முடிவடைந்து விட்டன. இங்கு தயாராகும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

இதற்காக மீஞ்சூரில் இருந்து செங்குன்றம் வரை ரூ.93 கோடி செலவில் 33 கிலோ மீட்டர் தூரத்துக்கு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குழாய் அமைக்கப் பட்டுள்ளது. மீஞ்சூரில் அமைந்துள்ள கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டப்பணிகளை தமிழக அரசின் தலைமை செயலாளர் ஸ்ரீபதி நேரில் சென்று பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மீஞ்சூர் குடிநீர் ஆலை அமைக்கும்பணி 96 சதவிதம் முடிவடைந்து விட்டது. இங்கு கடல்நீரில் இருந்து தினமும் 100 மில்லியன் லிட்டர் குடிநீர் தயாரித்து சென்னைக்கு அனுப்பப்படும்.

இங்கு தயாராகும் குடிநீரை அக்டோபர் 2-ந்தேதி முதல் சென்னை நகருக்கு குடிநீர் வாரியம் வினியோகம் செய்யும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இவ்வாறு ஸ்ரீபதி கூறினார்.

இதுபோல தென்சென்னை பகுதிக்கு குடிநீர் வழங்க நெமிலியில் அமைக்கப்படும் கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்ட பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. இங்கும் தினமும் 100 மில்லியன் லிட்டர் குடிநீர் தயாரித்து திருவான்மியூர், வேளச்சேரி, பள்ளிபட்டு பகுதிகள் பயன்பெறும் வகையில் குழாய் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படும்.

இந்த பணிகளை 24 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி நெமிலியில் இருந்து சென்னைக்கு 66 கிலோ மீட்டர் தூரம் குடிநீர் குழாய் அமைக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin