திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் மர்ம நபர் கொடுத்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை 9.15 மணிக்கு திருநெல்வேலி சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டருக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர் பாளையங்கோட்டையில் உள்ள தூய ஜான்ஸ் யோவான் மேல்நிலைப் பள்ளியின் 27வது அறைக்கும், மணி அடிக்கும் இடத்திலும் வெடிகுண்டு வைத்துள்ளதாக மர்ம நபர் பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி போலீஸ் துணை கமிஷனர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் உடனடியாக அதிரடிப் படைகளுடன் பள்ளிக்கு விரைந்தனர். வெடிகுண்டை கண்டறியும் கருவிகளுடன் போலீசார் பள்ளியினுள் நுழைந்து மாணவர்களை விளையாட்டு மைதானத்தில் அமர வைத்தனர்.
இதனையடுத்து பள்ளியின் அறைகள் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். மேலும், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தனர். இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்துள்ளது. இருப்பினும், இப்பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டல் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய துணை கமிஷனர் ஜெயச்சந்திரன், வெடிகுண்டு மிரட்டல் இரண்டு பொது தொலைபேசி எண்ணிலிருந்து வந்துள்ளது. இது புரளி என இப்பொழுது தெரியவந்துள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
செல்வா, திருநெல்வேலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக