தமிழ்நாட்டில் ஸ்ரீவைகுண்டம், இளையான்குடி, தொண்டாமுத்தூர், கம்பம், பர்கூர் ஆகிய 5 சட்டசபை தொகுதியில் ஆகஸ்ட் 18-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., ஊர்வசி செல்வராஜ் (காங்) மரணமடைந்ததை யடுத்து அங்கு தேர்தல் நடக்கிறது.
இந்த தொகுதியில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 1,40,131 வாக்காளர்களில் 93,648 பேர் வாக்களித்தனர்.
இதில் 38,188 ஓட்டுகள் பெற்று காங்கிரசை சேர்ந்த ஊர்வசி செல்வராஜ் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் தொகுதி சீரமைப்பு செய்யப்பட்டு, பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது வீடு வீடாக ஆய்வு நடத்தப்பட்டு பலரது பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தல் 2006-ம் ஆண்டில் தொகுதியின் எல்லையை கணக்கில் கொண்டு நடத்தப்படுகிறது. ஆகையால் தற்போது ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு தனியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதில் 57 ஆயிரத்து 353 ஆண் வாக்காளர்களும், 59 ஆயிரத்து 254 பெண் வாக்காளர்களும் ஆக மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரத்து 607 வாக்காளர்கள் உள்ளனர். இது கடந்த தேர்தலை விட 23 ஆயிரத்து 524 வாக்காளர்கள் குறைவு ஆகும். இதே போன்று தொகுதியில் 172 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
கடந்த 2006-ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் எந்தெந்த பகுதிகள் இடம் பெற்று இருந்ததோ, அதே பகுதியில் மட்டும் தேர்தல் நடக்கும். தொகுதி மறுசீரமைப்பு செய்த பகுதிகள் இடம் பெறாது. அதே நேரத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தேர்தல் நடக்கும். இந்த தொகுதியில் 100 சதவீதம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்தலில் உள்ள 172 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமிரா பொருத்தப்படும். ஒவ்வொரு வாக்குச்சாவடியும் இன்டர்நெட் மூலம் சென்னை தலைமை தேர்தல் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடியின் செயல்பாடுகளும் கண்காணிக்கப்படும். வாக்குகள் எண்ணிக்கை மையத்தை சாயர்புரம் போப் கல்லூரியில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிட முக்கிய பிரமுகர்கள் பலர் காய் நகர்த்தி வருகின்றனர். இதற்காக அவர்களது ஆதரவாளர்கள் களம் இறங்கி உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக