திங்கள், 22 ஜூன், 2009

தூத்துக்குடியில் தென்மாவட்ட சிறுபான்மையினர் நலப்பேரவை பேரணி

சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் சுயநிதிப் பிரிவில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்களுக்கு அரசு ஊதியம் வழங்கக் கோரி, தூத்துக்குடியில் தென்மாவட்டங்களை சேர்ந்த சிறுபான்மையினர் சனிக்கிழமை பேரணி நடத்தினர்.

தென்மாவட்ட சிறுபான்மையினர் நலப் பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணி, தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து தொடங்கியது.தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்ட முதன்மைக் குரு வி.பி. ஆஸ்வால்ட், இந்த பேரணியைத் தொடக்கிவைத்தார்.

தூத்துக்குடி மறைமாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பாளர் அருள்தந்தை குமார்ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் எம்.எஸ். தூராப் ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சி.எஸ்.ஐ திருநெல்வேலி திருமண்டல துணைத் தலைவர் ஜே.ஜே. கிறிஸ்துதாஸ், திருமண்டல பள்ளிகள் மேலாளர் ஏ. பீற்றர் தேவதாஸ், தூத்துக்குடி மறைமாவட்ட கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் அருள்தந்தை ஜேம்ஸ் விக்டர், தென்மாவட்ட சிறுபான்மையினர் நலப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ஜே. ஜெயக்குமார், செயலர் எம். பங்கராஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் செயல்படும் கிறிஸ்தவ, இஸ்லாமிய கல்வி நிறுவனங்களில் சுய நிதிப்பிரிவில் பணியாற்றும் சுமார் 1000 ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் பேரணியில் பங்கேற்றனர்.

ராஜாஜி பூங்காவில் இருந்து தொடங்கிய இப் பேரணி, பாளையங்கோட்டை சாலை, அண்ணா சிலை சந்திப்பு, பாலவிநாயகர் கோவில் தெரு, குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு, ரங்கநாதபுரம், மாநகராட்சி அலுவலகம், தெற்கு காட்டன் சாலை, ஜார்ஜ் சாலை வழியாக புனித லசால் மேல்நிலைப் பள்ளியைச் சென்றடைந்தது. இதைத் தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கிறிஸ்தவர் மற்றும் இஸ்லாமியர்கள் நடத்தும் பள்ளிகளில் சுய நிதிப் பிரிவுகளில் கடந்த 18 ஆண்டுகளாக எவ்வித ஊதியமும் இல்லாமல் பணியாற்றி வரும் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு அரசு ஊதியம் வழங்க வேண்டும் என பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தகவல் : தூத்துக்குடி வெப்சைட்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin