லாபம் தரும் அரசு நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன் இன்னொரு கட்டமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளையும் பொது விற்பனைக்குக் கொண்டுவருகிறது மன்மோகன் அரசு.
அரசுக்கு சொந்தமான மிகப் பெரிய நிறுவனங்கள் பலவற்றின் பங்குகளை தனியாருக்கு விற்பதில் ஜரூராக இறங்கியுள்ளது மத்திய அரசு. முன்பு மன்மோகன் சிங் அரசு இதைச் செய்ய முயன்ற போது, கம்யூனிஸ்டுகளின் கடும் எதிர்ப்பு காரணமாக பணிந்து போக வேண்டி வந்தது.
இப்போது முன்பை விட பலமாக அமைந்துள்ளது மத்திய அரசு. என்ன எதிர்ப்பு வந்தாலும் முழுமையாக அலட்சியம் செய்யும் மனநிலையில்தான் ஆட்சியாளர்களும் உள்ளனர்.
கடந்த ஆட்சியின்போது செய்ய நினைத்து, முடியாமல் போன பங்கு விற்பனையை இந்த ஆண்டு செய்தே தீருவது என ஒற்றைக் காலில் நிற்கிறது அரசு.
சில தினங்களுக்கு முன் என்எல்சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனப் பங்குகளில் 10 சதவிகிதத்தை விற்கப்போவதாக அறிவித்தது மத்திய அரசு. அடுத்து இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பங்குகளையும் விற்கப்போவதாக அறிவித்துள்ளது.
இந்தப் பங்குகளை விற்று 10 பில்லியன் டாலர்களை திரட்டப் போகிறார்களாம். விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என்கிறார் பிஎஸ்என்எல் சேர்மன் குல்தீப் கோயல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக