புதன், 24 ஜூன், 2009

எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஜன்னலோர படுக்கை வசதி: ஜூலை 13 முதல் முன்பதிவு ரத்து


நாடு முழுவதும் முக்கிய ரயில்களில் ஜன்னலோர 3-வது படுக்கை வசதி (பெர்த்) ரத்து செய்யப்படுகிறது.

வரும் ஜூலை 13-ம் தேதி முதல் இந்த படுக்கை வசதிகளுக்கு முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது.

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி, முத்துநகர், அனந்தபுரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் 3-வது படுக்கை வசதி செய்யப்பட்டது.

பயணிகளின் தேவையைச் சமாளிக்க இந்த வசதியை ஏற்படுத்த ரூ. 38 கோடி ஒதுக்கப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டி.ஆர்.டி.ஓ.) அனுமதியுடன் ரயில்களில் இந்த வசதி ஏற்படுத்தப்படுவதாக ரயில்வே துறை அறிவித்தது.
மிகவும் குறுகலாகவும், காற்றோட்டம் இல்லாமலும் இருந்ததால் இந்த 3-வது படுக்கை வசதி பயணிகளிடையே வரவேற்பைப் பெறவில்லை. இதனால், பெரும்பாலான பயணிகள் கடும் அதிருப்தியையும், எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

இதையடுத்து, ரயில்களின் ஜன்னலோரத்தில் 3-வது படுக்கை வசதிகள் விரைவில் ரத்து செய்யப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் இ. அகமது அறிவித்தார்.

இந்நிலையில், வரும் ஜூலை 13-ம் தேதி முதல் அனைத்து முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இந்த 3-வது படுக்கை வசதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்த படுக்கைகளுக்கு முன்பதிவு செய்வதும் ரத்து செய்யப்படுகிறது.

இந்த படுக்கை அகற்றப்பட்டு முன்பு போல ரயில்களின் ஜன்னலோரத்தில் இனி 2 படுக்கைகள் மட்டுமே இருக்கும். இதையடுத்து தூங்கும் வசதியுள்ள 2-ம் வகுப்பு பெட்டிகளில் இனி மொத்த படுக்கைகளின் (பெர்த்) எண்ணிக்கை 72 ஆகக் குறைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin