புதன், 24 ஜூன், 2009

இயக்குநர் ஷக்தி சிதம்பரத்திற்கு ஜமாத் பேரவை கண்டனம்

நபிகள் நாயகத்தின் பெயரை பட விளம்பரத்திற்குப் பயன்படுத்திய செயல் கண்டனத்துக்குரியது என்று ராஜாதி ராஜா பட இயக்குநர் ஷக்தி சிதம்பரத்திற்கு, சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை பொதுச் செயலாளர் மேலை நாசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராஜாதி ராஜா படம் சமீப காலமாக பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறது.

முதலில் இப்படத்தை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் நடிகை சுஹாசினி. இதற்குக் கண்டனம் தெரிவித்த ஷக்தி சிதம்பரம், சுஹாசினியின் கணவர் மணிரத்தினம் மட்டும் காப்பி அடிக்காமலா படம் எடுக்கிறார் என்று விளாசியிருந்தார்.

இந் நிலையில் ராஜாதி ராஜா படம் தொடர்பான விளம்பரங்கள் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன.

மற்ற படங்களையும், நடிகர்களையும் கிண்டல் செய்வது போல ராஜாதி ராஜ பட விளம்பரங்கள் இருப்பதாக ஏற்கனவே திரையுலகில் முனுமுனுப்பு நிலவுகிறது.

இந் நிலையில் மதச் சிக்கலில் மாட்டியுள்ளார் ஷக்தி சிதம்பரம். சில நாட்களுக்கு முன்பு இயேசு நாதர் படத்தைப் போட்டு, சிலுவைன்னா ஏசு, ராஜான்னா மாஸு என்று ஒரு விளம்பரம் வந்தது.

அதேபோல விஷ்னுன்னா அவதாரம், ராஜான்னா ஆரவாரம், ஐயப்பன்னா பள்ளிக்கட்டு, ராஜான்னா ஜல்லிக்கட்டு என்று குண்டக்க மண்டக்க விளம்பரத்தைக் கொடுத்துத் தள்ளியிருந்தனர்.

இந் நிலையில் தற்போது நபிகள் நாயகத்தின் பெயரையும் தனது விளம்பத்தில் சேர்த்து சிக்கலில் மாட்டியுள்ளார் ஷக்தி சிதம்பரம்.

இதற்கு சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. அமைப்பின் பொதுச் செயலாளர் மேலை நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நேற்று தமிழகத்தில் முன்னணி செய்தித்தாள்களில் சினிமா விளம்பரம் பகுதியில் ராஜா தி ராஜா என்ற திரைப்படத்தின் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.

அதில் மெக்கா, மதினா' படத்தை ஒரு பகுதியிலும், அந்த திரைப்படத்தின் ஹீரோ படத்தை ஒரு பகுதியிலும் பிரசுரித்து, ஒரு அவதூரான வசனத்தையும் சேர்த்து வெளியாகியுள்ள விளம்பரம் ஒட்டுமொத்த இஸ்லாமியர்கள் மனதை புண்படுத்துகின்ற செயலாக உள்ளது.

இச்செயலை செய்த படத்தின் இயக்குனர் ஷக்தி சிதம்பரம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தவறினால், சுன்னத் ஜமா அத் ஐக்கிய பேரவை மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

இதேபோல, சென்னை சுன்னத் வல் ஜமாஅத் மசூதி கூட்டமைப்புத் தலைவர் முகம்மது சிக்கந்தரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இயக்குனர் ஷக்தி சிதம்பரம் உடனடியாக இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin