திருநெல்வேலியில், எம்.பி.பி.எஸ். படிப்புக்கான விண்ணப்பங்களுக்கு வியாழக்கிழமை தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து டோக்கன் முறையில் விண்ணப்பம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
முதல் நாள் காலை 11 மணிக்குப் பிறகே விண்ணப்பங்கள் வந்து சேர்ந்ததால், அதனை விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. மொத்தம் இருந்த 150 விண்ணப்பங்களும் பிற்பகல் 2 மணிக்கே முடிந்தன.
இரண்டாம் நாளான வியாழக்கிழமை மாணவர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது, வரிசையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது.
இதனால் சிறிதுநேரம் விண்ணப்ப விநியோகம் பாதிக்கப்பட்டது. மாணவர்கள் ஒழுங்குப்படுத்தப்பட்ட பின்னர் மீண்டும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. மொத்தம் இருந்த 200 விண்ணப்பங்களும் 2 மணி நேரத்தில் முடிந்து விட்டன.
இதையடுத்து, வரிசையில் காத்திருந்தவர்களுக்கு வெள்ளிக்கிழமை விண்ணப்பம் வழங்கப்படும் எனக்கூறி அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டன.
இதுகுறித்து மருத்துவக் கல்லூரி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அண்டை மாவட்டமான கன்னியாகுமரி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகின்றன. ஆனால் அந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் இங்கு விண்ணப்பம் வாங்க வருகின்றனர். இதனால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாள்களில் 350 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை ஆயிரம் விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக