வியாழன், 25 ஜூன், 2009

பிரான்ஸ் : ' பர்கா ' உடை குறித்து ஆராய குழு அமைப்பு


பிரான்ஸ் நாட்டில் உள்ள இஸ்லாமிய பெண்கள் உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் அணியும் 'பர்கா ' உடை குறித்து ஆராய 32 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி, ' பர்கா' உடை இஸ்லாமிய பெண்களை சிறைப்படுத்துவதாகவும், பொது இடங்களில் 'பர்கா ' அணிவதற்கு தடை விதிப்பதை தாம் ஆதரிப்பதாகவும் கூறினார்.

பிரான்ஸ் குடியரசில் , பெண்கள் அனைத்து சமூக வாழ்க்கையிலிருந்து துண்டிக்கப்பட்டும், தங்களது அனைத்து அடையாளங்களை இழந்தும் , திரைக்கு பின்னால் சிறையிடப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சர்கோஸி மேலும் கூறியிருந்தார்.

அவரது இந்த பேச்சை தொடர்ந்து 'பர்கா' உடை குறித்து ஆராய பிரான்ஸ் நாடாளுமன்றம் குழு ஒன்றை அமைத்துள்ளது.

இந்தக் குழுவில் பிரான்ஸ் நாட்டின் பிரதான நான்கு கட்சிகளைச் சேர்ந்த 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு, இஸ்லாமிய பெண்கள் மற்றும் மத குருமார்கள் உள்ளிட்டவர்களிடம் ' பர்கா ' அணிவது குறித்து அவர்களது கருத்தை கேட்டறிவதோடு, அரசியல, சமூக மற்றும் பெண்கள் அமைப்புகளிடமும் இது குறித்த கருத்தை கேட்டறிந்து 6 மாத காலதிற்கு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் 'பர்கா' அணிய தடை விதித்து நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் ஏறக்குறைய 5 மில்லியன் இஸ்லாமியர்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.இவர்களில் ஒரு சிறிய ஆனால் வளர்ந்து வரும் பிரிவினர்தான் 'பர்கா' அணிகிறார்கள்.

இந்நிலையில், 'பர்கா' அணிவது குறித்து ஆராய குழு அமைத்திருப்பதை கடுமையாக விமர்சித்துள்ள சில பிரானஸ் இஸ்லாமிய மத குருமார்கள், இது இஸ்லாமியர்களை ஆத்திரமூட்டுகிற செயல் என்றும் எச்சரித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin