வியாழன், 25 ஜூன், 2009

வேதத்தை வியாபாரமாக்குதல்

وَآمِنُواْ بِمَا أَنزَلْتُ مُصَدِّقاً لِّمَا مَعَكُمْ وَلاَ تَكُونُواْ أَوَّلَ كَافِرٍ بِهِ وَلاَ تَشْتَرُواْ بِآيَاتِي ثَمَناً قَلِيلاً وَإِيَّايَ فَاتَّقُونِ

உங்களிடமிருப்பதை (வேதத்தை) உண்மைப் படுத்தும் விதமாக நான் அருளியதை (குர்ஆனை) நம்புங்கள்! அதை மறுப்பவர்களில் முதன்மையானவராக நீங்கள் ஆகிவிடாதீர்கள்! எனது வசனங்களை அற்பக்கிரயத்திற்கு விற்று விடாதீர்கள்! என்னையே அஞ்சுங்கள்!
(அல்குர்ஆன் 2:41)

தங்கள் மார்க்கத்தையும் வேதத்தையும் வியாபாரப் பொருட்களாக ஆக்கிவிட்ட நபி(ஸல்) காலத்து யூத கிறித்தவர்களை நோக்கி இந்த வசனம் பேசுகின்றது. இந்த கருத்தில் இன்னும் பல வசனங்களும் உள்ளன. (பார்க்க 5:44, 3:187, 3:199)

இவ்வசனங்கள் நேரடியாக இவ்விரு சமுதாயங்களைக் குறிப்பிட்டாலும் வேதத்தை வியாபாரமாக்கும் முஸ்லிம்களும் இதில் அடங்குவார்கள் என்பதை அறிவுடையோர் மறுக்க மாட்டார்கள். இறைவனின் இந்தத் தெளிவான கட்டளை அப்பட்டமாக அலட்சியப்படுத்தப்படும் நிலையை முஸ்லிம்களிடம் நாம் காண்கிறோம். முஸ்லிம் சமுதாயத்தில் பெரும் பகுதியினர் மார்க்கத்தையும், வேதத்தையும் விற்பவர்களாகவோ விலைக்கு வாங்குபவர்களாகவோ இருப்பதையும் காணமுடிகின்றது.

இதற்குக் காரணம் என்ன? இந்த வசனம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கவேண்டும். அல்லது அறவே இவ்வசனங்கள் புரிந்து கொள்ளப்படாமலிருக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்களைத் தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது.

வேதத்தையும் அந்த வேதம் கற்றுத்தரும் மார்க்கத்தையும் அந்த மார்க்கத்தில் வலியுறுத்தப்படும் வணக்கங்களையும் வியாபாரமாக்கி விட்டார்கள். அந்த வியாபாரத்தையும் நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதை நாம் காண்கிறோம். அதற்கு சில ஆதாரங்களையும் வாதங்களையும் முன் வைக்கின்றனர். அவற்றைப் பார்த்து விட்டு இந்த வசனத்தின் சரியான விளக்கத்தைக் காண்போம்.

நபித்தோழர்களில் சிலர் ஒரு தண்ணீர்த் துறையைக் கடக்கலானார்கள். அந்தத் தண்ணீர்த் துறைக்குரியவர்களில் ஒருவர் விஷக்கடிக்கு ஆளாகி விட்டார். உடனே அவர்கள் நபித்தோழர்களிடம் வந்து 'உங்களில் மந்திரிப்பவர் எவருமுண்டோ?' என்று கேட்டார்கள். உடனே நபித்தோழர்களில் ஒருவர் புறப்பட்டுச் சென்று ஆட்டுக்குக் கூலியாக ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதினார். (விஷக்கடிக்கு ஆளானவர் குணமடைந்ததும்) கூலியாகப் பெற்ற ஆட்டையும் தோழர்களிடம் கொண்டு வந்தார். அவர்கள் அதிருப்தியுற்று அல்லாஹ்வின் வேதத்துக்குக் கூலி வாங்கி விட்டீரே என்று கூறினர். முடிவில் மதீனாவுக்கு வந்து 'அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதர் அல்லாஹ்வின் வேதத்துக்குக் கூலி பெற்று விட்டார்' எனக் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'நீங்கள் கூலி பெறத் தகுதியானது அல்லாஹ்வின் வேதமாகும்' எனக் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் இடம் பெற்றுள்ளது.

மற்றொரு அறிவிப்பில் மந்திரிக்கச் சென்ற நபித்தோழர், அவர்களிடம் சில ஆடுகள் தர வேண்டும் என்று பேரம் பேசி அல்ஹம்து அத்தியாயத்தை ஓதிப்பார்த்ததாகவும், அவர் உடனடியாக நிவாரணம் பெற்றதும் பேசியபடி ஆடுகளைப் பெற்றதாகவும், அதைப் பங்கு வைக்குமாறு சிலர் கூறியதாகவும் அப்போது மந்திரித்தவர், 'நபி(ஸல்) அவர்களிடம் சென்று இதைக் கூறி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறியாமல் நாம் பங்கு வைக்க வேண்டாம்' என்று கூறியதாகவும் அவ்வாறே நபி(ஸல்) அவர்களிடம் வந்து விபரம் கூறிய போது 'அந்த அத்தியாயம் ஓதிப்பார்க்கத்தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு 'நீங்கள் செய்தது சரியானதே! அதைப் பங்கு வையுங்கள்! எனக்கும் ஒரு பங்கைத் தாருங்கள்!' என்ற கூறி சிரித்ததாகவும் கூறப்படுகின்றது. அபூஸயீத்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

காரிஜா இப்னுஸ் ஸல்த் என்பவரின் சிறிய தந்தை நபி(ஸல்) அவர்களைச் சந்தித்து விட்டு திரும்பும் போது ஒரு கூட்டத்தினரைக் கடந்தார்கள். அவர்களில் இரும்பு (சங்கிலியால்) கட்டப்பட்ட ஒரு பைத்தியக்காரர் இருந்தார். அவரது குடும்பத்தினர் அந்த நபித்தோழரை நோக்கி 'உங்கள் தோழராகிய நபி(ஸல்) சிறந்த மார்க்கத்தைக் கொண்டு வந்துள்ளதாக அறிகிறோம். இந்தப் பைத்தியத்திற்கு உங்களிடம் ஏதேனும் வைத்தியம் உண்டா? என்றனர். அந்த நபித்தோழர் ஒவ்வொரு நாளும் இரண்டு தடவை வீதம் மூன்று நாட்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதிப் பார்த்தார். பைத்தியம் விலகியது. அவர்கள் அவருக்கு இருநூறு ஆடுகள் தந்தார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது 'அதை நீ வைத்துக் கொள்! தவறாக ஓதிப் பார்த்து உண்பதை விட இது சத்தியத்தை ஓதிப்பார்த்த கூலியாகும்' என்றார்கள். காரிஜா அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், நஸயீ, அபூதாவூத், இப்னு ஹிப்பான், ஹாகிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

வீடு வீடாகச் சென்று குர்ஆன் ஓதிவிட்டு கூலி வாங்கலாம். ரமளானில் குர்ஆன் ஓதி தொழ வைப்பதற்கு கூலி வாங்கலாம். தொழ வைப்பதற்கு சம்பளம் வாங்கலாம் என்பதற்கு இந்த ஹதீஸ்களை ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கின்றனர். குர்ஆனுக்குக் கூலி வாங்கலாம் என்று இந்த ஹதீஸில் தெளிவாகவே கூறப்படுவதால் இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் எடுத்து வைக்கும் வேறு சில ஆதாரங்களையும் நாம் காண்போம்.

ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தன்னை நபி(ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது ஒரு மனிதர் எழுந்து தங்களுக்குத் தேவையில்லை என்றால் இப்பெண்ணை எனக்கு மணமுடித்து வையுங்கள் என்றார். அவளுக்கு மஹராக வழங்க ஏதும் உம்மிடம் உள்ளதா? என்று நபி(ஸல்) கேட்டார்கள். அதற்கு அவர் 'இந்த எனது ஆடையைத் தவிர என்னிடம் வேறு ஏதும் இல்லை என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ உனது ஆடையை அவளுக்குக் கொடுத்தால் ஆடையே இல்லாமல் நீ இருக்க வேண்டி வரும். எனவே வேறு எதையாவது தேடுவீராக என்றனர். அதற்கு அவர் எனக்கு ஏதும் கிடைக்கவில்லை என்றார். அப்படியானால் ஒரு இரும்பு மோதிரத்தையாவது தேடுவீராக என்று நபி(ஸல்) கூறினார்கள். அவர் எதுவும் கிடைக்கவில்லை என்றார். குர்ஆனில் உமக்கு ஏதேனும் தெரியுமா? என நபி(ஸல்) கேட்டார்கள். இன்னின்ன அத்தியாயங்கள் தெரியும் என்று அந்த அத்தியாயங்களின் பெயர்களை அவர் குறிப்பிட்டார். உம்மிடம் இருக்கும் குர்ஆன் அத்தியாயங்களுக்காக உமக்கு நான் மணமுடித்துத் தந்தேன் என்று கூறினார்கள். லஹ்ல் பின் ஸஃது(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

மணப்பெண்ணுக்கு மஹர் தொகையாக நபி(ஸல்) அவர்கள் குர்ஆனையே ஆக்கியுள்ளதால் குர்ஆன் மற்ற பொருட்களைப் போலவே நபி(ஸல்) அவர்களால் கருதப்பட்டுள்ளது. எனவே குர்ஆனுக்குக் கூலி வாங்கலாம் என்பதும் இவர்களின் வாதம்.

எனக்கு நபி(ஸல்) அவர்கள் பாங்கைக் கற்றுத் தந்தனர். அவர்கள் கற்றுத் தந்தவாறு பாங்கு சொல்லி முடித்ததும் எனக்கு ஒரு பை தந்தனர். அதில் சிறிதளவு வெள்ளி இருந்தது என்று அபூமஹ்தூரா(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் நஸயீ, இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

பாங்கு என்பது ஒரு வணக்கம். இந்த வணக்கத்தை செய்து முடித்தபோது நபி(ஸல்) அவர்கள் அவருக்கு கூலி கொடுத்திருப்பதால் வணக்கங்களுக்கும் வேதத்துக்கும் கூலி வாங்கலாம் என்பதும் இவர்களின் வாதம்.

இந்த ஹதீஸ்கள் யாவும் ஆதாரப்பூர்வமானவை என்பதில் ஐயமில்லை. இவர்கள் கூறுவது தான் இதன் விளக்கம் என்றால் மேற்கண்ட வசனத்திற்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். மேலும் பின்வரும் ஹதீஸ்களுக்கும் எந்த அர்த்தமும் இல்லாமல் போய் விடும்.

குர்ஆனை ஓதுங்கள்! அதில் வரம்பு மீறாதீர்கள்! அதை அலட்சியப்படுத்தாதீர்கள்! அதன் மூலம் சாப்பிடாதீர்கள். அதன் மூலம் (பொருளையும் புகழையும்) பெருக்கிக் கொள்ளாதீர்கள் என்று நபி(ஸல்) கூறியதாக அப்துர்ரஹ்மான் பின் ஷிப்ல்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.

நாங்கள் குர்ஆனை ஓதிக் கொண்டிருந்த போது எங்களிடம் நபி(ஸல்) வந்தார்கள். எங்களில் அரபியரும் அரபியல்லாதவரும் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எல்லோருமே (அதாவது இரண்டு சாரார் ஓதுவதும்) அழகாகத்தான் உள்ளது. அம்பு (வளைவின்றி நேராக ஆக்கப்படுவது) போல் குர்ஆனை நேராக ஆக்கும் கூட்டத்தினர் தோன்றுவார்கள். (அதாவது உச்சரிப்புகள் ராகங்கள் ஆகியவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள்) அவர்கள் (இம்மையிலேயே) அதன் கூலியை அவசரமாகத் தேடுவார்கள். மறுமைக் கூலிக்காகக் காத்திருக்க மாட்டார்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். ஜாபிர்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. இதே கருத்தை ஸஹ்ல் பின் ஸஃது(ரலி) அறிவிப்பதாகவும் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.

தமது பாங்குக்காக கூலி எதுவும் பெறாத முஅத்தினை நீ ஏற்படுத்துவாயாக என்பதே நபி(ஸல்) அவர்கள் என்னிடம் எடுத்துக் கொண்ட உடன்படிக்கையில் இறுதியானதாகும் என்று உஸ்மான் பின் அபில் ஆஸ்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மத், அபூதாவூது, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா, ஹாகிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ்கள் வணக்கங்களுக்கோ குர்ஆனுக்கோ இவ்வுலகக் கூலியைப் பெறலாகாது என்று அறிவிக்கின்றன. இவ்விரண்டு வகையான ஹதீஸ்களையும் இணைத்துத் தான் நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

குர்ஆன் சம்பந்தமாக எந்தவித கூலியும் பெறக்கூடாது என்றால் முதல் வகையிலான ஹதீஸ்களை மறுக்கும் நிலை ஏற்படும். குர்ஆனை எந்தவிதத்தில் பயன்படுத்தினாலும் கூலி வாங்கலாம் என்றால் இரண்டாம் வகையிலான ஹதீஸ்களை மறுக்கும் நிலை ஏற்படும். இரண்டு வகையிலான ஹதீஸ்களில் எதையும் மறுக்காமல் பொதுவான விளக்கத்துக்கு வருவது சிரமமானதல்ல. இரண்டு வகையான ஹதீஸ்களையும் நாம் சிந்திக்கும் போது இதை விளங்கலாம்.

குர்ஆன் ஓதுவது என்பது இரண்டு வகைகளில் அமைகின்றது. ஒன்று மனிதனுக்கு உதவுவதற்காக ஓதிப்பார்த்தல் போன்ற வழிகளில் பயன்படுத்துவது. மற்றொன்று மறுமைப் பயன் கருதி ஓதுவது. முதல் வகையில் பயன்படுத்தும் போது கூலி வாங்கலாம் என்பதை முதல் ஹதீஸ்கள் கூறுகின்றன. இரண்டாவது வகையில் பயன்படுத்தினால் கூலி வாங்கக் கூடாது என்பதை இரண்டாவது வகை ஹதீஸ்கள் கூறுபின்றன என்று விளங்கிக் கொண்டால் முரண் ஏதுமில்லை.

குர்ஆனை அச்சிட்டு விற்பனை செய்வதும் அதன் தமிழாக்கத்தை அச்சிட்டு விற்பதும் அதன் போதனைகளை அச்சிட்டு விற்பதும் குர்ஆனை விற்பது என்பதில் அடங்காது. வணக்க வழிபாடுகளுக்கு கூலி வாங்குவதுடன் இதை ஒப்பு நோக்க முடியாது. அச்சுத் தொழில், புத்தக விற்பனை என்பது தொழில் என்ற முறையில் முதலீடு செய்யப்படுகின்றது. அச்சிடுவோர், அச்சுக்கோர்ப்போர், பைண்டிங் செய்வோர் ஆகியோருக்கு சம்பளம் கொடுக்கப்படுகின்றது.

தொழில் என்ற முறையில் தான் இதை எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர குர்ஆனை விற்பது என்ற குற்றத்தில் அடங்காது. வீடுவீடாகப் போய்க் குர்ஆனை ஓதுவதற்கும் ரமளானில் தொழுகை நடத்துவதற்கும் எந்த முதலீடும் செய்யப்படுவதில்லை. அது முற்றிலும் கலப்பற்ற வணக்கமாகும். இந்த வணக்கத்தைச் செய்து விட்டு கூலி கேட்பது குர்ஆனை விற்றதாகத்தான் அமையும்.

பாங்கு சொல்லிய பிறகு அபூமஹ்தூரா(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூலி வழங்கியுள்ளார்களே வணக்கங்களுக்கு கூலி கொடுக்கலாம் என்பதற்கு இது சான்றாக உள்ளதே என்ற கேள்வி தவறாகும்.

'கூலி வாங்காத முஅத்தினை ஏற்படுத்திக் கொள்வீராக!' என்று நபி(ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்து விட்ட பிறகு நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் நீண்ட காலம் முஅத்தின்களாகப் பணிபுரிந்த பிலால்(ரலி) அப்துல்லாஹ் இப்னு உம்மிமக்தும்(ரலி) ஆகியோருக்கு கூலி எதுவும் கொடுக்காமலிருந்த பிறகும் நபி(ஸல்) அவர்கள் அபூமஹ்தூரா(ரலி) அவர்களுக்கு வழங்கியது எப்படி பாங்கின் கூலியாக இருக்க முடியும்?

புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர் என்பதால் பைதுல்மால் எனும் பொது நிதியிலிருந்து நபி(ஸல்) அவர்கள் வழங்கிய அன்பளிப்பாகவே அதைக் கருத முடியும்.

இன்னொரு கோணத்திலும் இதை நாம் சிந்திக்கலாம். வணக்கங்களுக்குக் கூலி வாங்கலாம் என்ற வாதத்தின்படி எல்லா வணக்கங்களுக்கும் கூலி வாங்கலாம் என்று ஆகும். நான் நோன்பு வைக்கப் போகிறேன். அதற்கு ஒரு நூறு ரூபாய் தாருங்கள் என்று கேட்க முடியுமா? இவ்வாறு கேட்க முடியாது என்றால் நான் தொழப்போகிறேன். அதற்கு இவ்வளவு ரூபாய் தாருங்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? நோன்பைப் போலவே தொழுகையும் குர்ஆன் ஓதுவதும் வணக்கம் தானே.

மார்க்கத்தை வியாபாரமாக ஆக்குவோர் மற்றோர் புதுமையான வாதத்தையும் எடுத்து வைக்கிறார்கள்.

நாங்கள் குர்ஆன் ஓதிவிட்டு வாங்குவது குர்ஆனுடைய கூலி அல்ல. எங்கள் நேரத்தை ஒதுக்கியதற்காகவே வாங்குகிறோம். அந்த நேரத்தில் வேறு வேலை செய்து நாங்கள் பொருள் திரட்டியிருப்போமல்லவா. அதை விட்டு விட்டு இதற்காக நேரத்தை ஒதுக்கியதற்கே கூலி வாங்குகிறோம் என்கின்றனர்.

ஒரு வேலை செய்வதென்றால் நேரத்தை ஒதுக்காமல் எந்த வேலையையும் செய்ய முடியாது. இந்தச் சாதாரண உண்மையைக் கூட விளங்காமல் இவ்வாறு வாதிடுகின்றனர்.

ஒருவர் சாராயக்கடையில் கணக்கெழுதச் சென்று சம்பளம் பெறுகிறார். நான் நேரம் ஒதுக்கியதற்காகவே சம்பளம் பெறுகிறேன் என்றும் கூறுகிறார் என்றால் நாம் அதை ஏற்கமாட்டோம். மார்க்கத்தை வியாபாரமாக ஆக்கக்கூடாது என்பதும், சாராயக்கடையில் கணக்கெழுதக்கூடாது என்பதும் இரண்டுமே மார்க்கத்தின் கட்டளை தான்.

எதை வியாபாரமாக ஆக்கக் கூடாது என்று மார்க்கம் சொல்கிறதோ அந்த வழிகளில் வியாபார நோக்கத்தில் ஒருவர் நேரத்தை ஒதுக்கவும் கூடாது என்றே கொள்ள வேண்டும். இல்லை என்றால் எல்லா பித்அத்களையும் எல்லா தவறுகளையும் நியாயப்படுத்த நேரிடும்.

மஹர் சம்பந்தமான ஹதீஸிலும் மார்க்கத்தை வியாபாரமாக்கும் போக்குக்கு ஆதாரம் கிடையாது. மஹர் என்பது பெண் தீர்மானிக்க வேண்டிய விஷயம். ஒரு பெண் எவ்வளவு கூடுதலாகவும், குறைவாகவும் மஹர் கேட்கலாம். விரும்பினால் தனக்கு மஹர் எதுவும் வேண்டாம் என்றும் கூறலாம். சம்பந்தப்பட்ட ஹதீஸில் அப்பெண்மணி தனக்குள்ள இந்த உரிமையை நபி(ஸல்) அவர்களின் கையில் ஒப்படைத்து விட்டார்.

நபி(ஸல்) அவர்கள் இயன்றவரை அவரிடம் மஹர் பெற முயற்சிக்கிறார்கள். இரும்பு மோதிரமாவது கொண்டு வா என்ற அளவுக்கு இறங்கி வருகிறார்கள். எதுவும் இல்லை என்ற நிலையில் அவர் குர்ஆனை அறிந்தவர் என்பதால் மஹர் இல்லாமல் அவருக்கு மணமுடித்துக் கொடுக்கிறார்கள்.

நல்ல குணமுடைய ஒரு மணமகன் கிடைக்கும் போது 'உங்கள் நற்குணமே போதும் மஹர் வேண்டாம்' என்று ஒரு பெண் கூறினால் நற்குணம் விலை பேசப்பட்டு விட்டது என்று எப்படி கருத முடியாதோ அது போன்றது தான் இதுவும். இதையெல்லாம் மார்க்கத்தை வியாபாரமாக்குவதற்கு சான்றாகக் காட்ட முடியாது.

வணக்கமாக அமைந்துள்ள இடங்களில் குர்ஆனைப் பயன்படுத்திவிட்டு கூலி கேட்கக் கூடாது. யூத கிறித்தவர்கள் அன்று வேதத்தையும் அதன் போதனைகளையும் மறைத்து விட்டு அதன் மூலம் உலக லாபங்களை அடைந்து வந்தனர். அது கூடாது என்பது தான் மேற்கண்ட வசனத்தின் பொருள் என்பதை அறிந்து கொண்டால் குழப்பங்களுக்கு இடமில்லை

வெளியீடு : இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin