திங்கள், 1 ஜூன், 2009

முஸ்லிம்களுக்கு 13 சதவிகித இட ஒதுக்கீடு: தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம்

மத்திய அரசு முஸ்லிம்களுக்கு 13 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என, திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜின்னா திடலில் நடைபெற்ற இந்த இஸ்லாமிய பகுத்தறிவு மாநாட்டில், அந்த அமைப்பின் தலைவர் பி. ஜைனுல்ஆப்தீன் "இஸ்லாம் ஒரு பகுத்தறிவு மார்க்கம்' என்ற தலைப்பில் பேசியதாவது:

கடவுள் இல்லை என கூறுவது தான் பகுத்தறிவு என்று பரவலாகக் கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் கடவுள் ஒருவன் இருக்கிறான் என்று நம்புவதுதான் பகுத்தறிவுக்கு ஏற்றது. கடவுளைக் கண்டால் தான் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளும் என்று சிலர் கூறுகின்றனர். ஒரு விஷயத்தை கண்ணால் கண்ட பின் ஏற்றுக் கொள்வதைக் பகுத்தறிவு என ஒப்புக் கொள்ள முடியாது.

ஒரு செயலின் மூலம் மற்றொன்றை சிந்தித்து அறிந்து கொள்வதுதான் பகுத்தறிவாகும். அந்த அடிப்படையில் பார்த்தால், வானம், பூமி, சூரியன், சந்திரன் ஆகியவை எப்படி குறிப்பிட்ட அடிப்படையில் இயங்குகின்றன என்பதை பார்த்தால் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பது உறுதியாகிறது.

இந்த உலகில் நடைபெறும் பல்வேறு தீமைகளுக்கும் கடவுள் மறுப்புக் கொள்கை தான் காரணமாக உள்ளது. கடவுளை நம்ப மறுப்பவர்கள், தண்டிக்க யாரும் இல்லையென்ற நினைப்பில் தவறுகளை துணிந்து செய்கிறார்கள். ஆனால், கடவுள் இருப்பதாக நம்புபவர்கள், தான் தண்டிக்கப்படுவோம் என கடவுளுக்கு பயந்து தீமைகளை பெரும்பாலும் செய்வதில்லை என்றார் ஜைனுல்ஆப்தீன்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மத்தியில் பதவி ஏற்றுள்ள காங்கிரஸ் அரசு, சச்சார் குழு பரிந்துரையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மத்திய அரசு முஸ்லிம்களுக்கு 13 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இடிக்கப்பட்ட இடத்தில் பாபர் மசூதி மீண்டும் கட்டப்பட வேண்டும்.

தமிழக அரசு கிறிஸ்தவர்களால் திருப்பி அளிக்கப்பட்ட 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டையும் சேர்த்து முஸ்லிம்களுக்கு 7 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மத்திய அரசு ஏற்கெனவே கூறியது போல கலவரத் தடுப்பு பாதுகாப்புப் படையை உருவாக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, மாநாட்டுக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் எஸ். யூசுப்அலி தலைமை வகித்தார்.

மாநில மேலாண்மைக் குழுத் தலைவர் எம். ஷம்சுல்லுஹா, மாவட்டச் செயலர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மாநில சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் கலந்து கொண்டார்.

மாநாட்டில் என். மாலைராஜா எம்.எல்.ஏ., மேலப்பாளையம் மண்டலத் தலைவர் எஸ்.எஸ். முகம்மது மைதீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin