புதன், 6 மே, 2009

பி.இ.: விண்ணப்பிக்க குறைந்தபட்ச மதிப்பெண் தேவை

பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் பிளல் 2 பாடங்களில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் மன்னர் ஜவஹர் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

பி.இ. படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் பிளஸ் 2 பாடங்களில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். அதாவது, அகாடமி பிரிவு மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களிலும், தொழிற்பிரிவு மாணவர்கள் தங்கள் தொழிற்பிரிவு படிப்பு தொடர்பான பாடம், எழுத்து மற்றும் செய்முறை பாடங்களிலும் குறைந்தபட்ச சராசரி மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

அதன்படி, அகாடமி, தொழிற்பிரிவு மாணவர்களில் பொதுப் பிரிவினர் 55 சதவீத மதிப்பெண்களும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 50 சதவீத மதிப்பெண்களும், எம்.பி.சி. பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று துணை வேந்தர் கூறினார்.

பி.இ., பி.டெக். விண்ணப்பங்கள் புதன்கிழமை (மே 6) முதல் மே 30 வரை வழங்கப்படும். விண்ணப்ப விநியோக காலங்களில் மே 12, 13, 16 ஆகிய தேதிகளிலும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பங்கள் வழங்கப்படமாட்டாது.

விண்ணப்பத்தின் விலை ரூ.500. (எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250). தபாலில் பெற ரூ.200 கூடுதலாக செலுத்த வேண்டும்

சென்னையில் ஆவடி சேர்த்து 5 மையங்களிலும், விழுப்புரம், திருச்சி, கோவை, மதுரை, சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 3 மையங்களிலும், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 மையங்களிலும், மற்ற மாவட்டங்களில் தலா ஒரு மையத்திலும் விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 31 மாலை 5.30-க்குள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin