புதன், 6 மே, 2009

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் திங்கள்கிழமை துவங்கியது.

விண்ணப்பங்கள் விநியோகத்தை கல்லூரி முதல்வர் வை.கி. வெங்கடரமணி துவக்கிவைத்தார். முதல் விண்ணப்பத்தை அருப்புக்கோட்டையை சேர்ந்த ராஜேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

இதுதொடர்பாக கல்லூரி முதல்வர் வை.கி. வெங்கடரமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இளநிலை கால்நடை மருத்துவம் (பி.வி.எஸ்சி.), இளநிலை மீன்வள அறிவியல் (பி.எப்.எஸ்சி.) மற்றும் இளநிலை உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பவியல் (பி.டெக்.) ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

ஜூன் 15-ம் தேதி வரை அனைத்து அலுவலக நாள்களிலும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தின் விலை ரூ.500 ஆகும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250 ஆகும்

விண்ணப்பப் படிவம் பெற, உரிய தொகையை வங்கிக் கேட்பு வரைவோலையாக, நிதி அலுவலர் தமிழ்நாடு, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை- 51 என்ற பெயரில் எடுத்து நேரிலோ, தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

அஞ்சல் வழியில் விண்ணப்பம் பெறுவோர் கேட்பு வரைவோலையுடன் ரூ.40-க்கான அஞ்சல் வில்லைகள் ஒட்டப்பட்ட, சுயமுகவரியுடன் கூடிய (37.5ல 28 செ.மீ. அளவுள்ள) உறையுடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 15-ம் நாள் மாலை 5.45 மணிக்குள் தலைவர், சேர்க்கைக் குழு (இளநிலை), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை வளாகம், சென்னை- 51 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் மேற்கண்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் 15.6.2009 பிற்பகல் ஒரு மணி வரை விற்பனை செய்யப்படும்.

அவற்றில் உடல் ஊனமுற்றோர், விடுதலைப் போராட்ட வீரரின் பிள்ளைகள், முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கென தலா ஒரு சேர்க்கை அனுமதியும், மாவட்ட, மாநில, தேசிய அளவில் விளையாட்டுத் துறை சான்றுடையோருக்கு 2 சேர்க்கை அனுமதியும், மேல்நிலைப் படிப்பில் மீன்வளத்தை விருப்பப் பாடமாக பயின்றோருக்கு 2 சேர்க்கை அனுமதியும், இந்திய வேளாண் ஆய்வுக் கழகம், புதுதில்லி நடத்தும் அகில இந்திய நுழைவுத் தேர்வு வாயிலாக 5 மாணவர்களும் தேர்வு செய்யப்படுவர்.

மீதமுள்ள இடங்களுக்கு தொழில்நுட்பப் படிப்புகளுக்கான தமிழக அரசின் இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை அனுமதி வழங்கப்படும்

அனைத்து இடஒதுக்கீடு சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண்கள் குறித்து தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அலுவலகத்தில், அலுவலக நாள்களில் காலை 10 முதல் மாலை 5.45 மணிவரை நேரிலோ அல்லது 0461- 2340154/ 2340554 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்புகொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin