திருச்செந்தூருக்கும் சென்னைக்கும் இடையே தற்போது வாரம் ஒருநாள் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் திருச்செந்தூரில் வாரம்தோறும் வியாழக்கிழமை இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.30 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
அது போல வாரம் தோறும் வெள்ளிக்கிழமை மாலை 3.40 மணிக்கு சென்னையில் புறப்பட்டு மறுநாள் காலை 6.40 மணிக்கு திருச்செந்தூர் சென்றடைகிறது.
பயணிகள் வேண்டு கோளை ஏற்று இந்த ரெயிலை வாரத்தில் 5 நாட்கள் இயக்க ரெயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் இந்த அறிவிப்பை அதிகாரிகள் செயல்படுத்தாமல் நிறுத்தி வைத்தனர்.
தற்போது கோடை விடு முறையில் தென்னகத்தில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுவதாலும், தேர்தல் முடிந்து புதிய அரசு பதவி ஏற்றதாலும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை முன்பு திட்டமிட்டது போல் வாரத்திற்கு 5 நாட்கள் இயக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்ற ஜெயதுரை எம்.பி. கூறும்போது, செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை வாரத்தில் 5 நாட்கள் மட்டும் இல்லாமல் தினசரி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என்று கூறினார்.
தற்போது ரெயில்வே மந்திரியாக மம்தா பானர்ஜி பதவி ஏற்றுள்ளார். விரைவில் இந்த துறைக்கு துணை மந்திரிகள் நியமிக்கப்பட உள்ளனர். கடந்த முறை போல இந்த முறையும் ரெயில்வே துணை மந்திரி தமிழகத்துக்கு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டு மத்திய மந்திரிகள், மற்றும் எம்.பி.க்கள் பதவி ஏற்கிறார்கள்.
பின்னர் பாராளுமன்ற கூட்டம் வருகிற 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தொடர் முடிந்ததும் இதற்கான முறைப்படியான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி ஓடும் என்று கூறப்படுகிறது.
இது போல் நெல்லையில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில், திருவனந்தபுரம் கொங்கன் மலைப்பாதை வழியாக மும்பைக்கு வாரம் ஒரு ரெயில் விடவும் கடந்த ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்த ரெயிலையும் விரைவில் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் இந்த ரெயிலையும் விரைவில் இயக்க ரெயில்வே அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக