தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. தொகுதியில் உள்ள 1,293 வாக்குச்சாவடிகளிலும் திட்டமிட்டப்படி வாக்குப்பதிவு தொடங்கியது.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 65.7 சதவிகித வாக்குகள் பதிவாகின.
மாலை 5 மணி வரை இடைவிடாமல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு வாக்குச்சாவடிக்கு வந்த அனைவருக்கும் வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
வாக்குப்பதிவு முடிந்ததும் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. பின்னர் அனைத்து இயந்திரங்களும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தூத்துக்குடியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பப்பட்டன.
இத் தொகுதியைப் பொருத்தவரை தூத்துக்குடி உள்ளிட்ட நகர்புறப் பகுதிகளில் வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுப்பாக காணப்பட்டது. அதே நேரத்தில் கிராமப்புறப் பகுதிகளில் வாக்குப்பதிவு மந்தமாக காணப்பட்டது.
இத் தொகுதியில் சராசரியாக 65.7 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.
தூத்துக்குடி பேரவை தொகுதியில் 68.6 சதவிகிதம், விளாத்திகுளம் பேரவை தொகுதியில் 54.2 சதவிகிதம், ஓட்டப்பிடாரம் பேரவை தொகுதியில் 71.4 சதவிகிதம், திருச்செந்தூர் பேரவை தொகுதியில் 65.7 சதவிகிதம், ஸ்ரீவைகுண்டம் பேரவை தொகுதியில் 70.5 சதவிகிதம், கோவில்பட்டி பேரவை தொகுதியில் 64 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தூத்துக்குடி தொகுதி தேர்தல் அலுவலரான ஆட்சியர் கோ. பிரகாஷ் தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது மனைவி சிந்துஜாவுடன் வந்து வரிசையில் காத்திருந்து காலை 7 மணிக்கு வாக்களித்தார்.
மாநில சமூக நலத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் தூத்துக்குடி-எட்டையபுரம் சாலையில் உள்ள கூட்டுறவு பண்டகசாலை வாக்குச்சாவடியில் காலை 7.30 மணிக்கு வாக்களித்தார். இத் தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் 4 பேருக்கு இந்த தொகுதியில் ஓட்டு இல்லை.
அதிமுக வேட்பாளர் சிந்தியா பாண்டியனுக்கு திருநெல்வேலி மாவட்டம் கோவிந்தபேரியிலும், திமுக வேட்பாளர் எஸ்.ஆர். ஜெயதுரை, தேமுதிக வேட்பாளர் எம்.எஸ். சுந்தர், சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் கராத்தே எஸ். சரவணன் ஆகியோருக்கு சென்னையிலும் ஓட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக