புதன், 20 மே, 2009

நெல்லை, தூத்துக்குடியில் கிராமங்களுக்கு 2-வது நாளாக இரவு பஸ்கள் நிறுத்தம்

நெல்லை, தூத்துக்குடியில் 2-வது நாளாக கிராமங்களுக்கு இரவு நேர பஸ்கள் நிறுத்தப்பட்டன. இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கே பஸ் கண்ணாடி உடைப்பு, பஸ் மறியல் போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன.

அசம்பாவிதத்தை தடுக்க போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்கள், கட்சி அலுவலகங்கள், பஸ் நிலையம், ரெயில் நிலையம் போன்ற முக்கிய இடங்களில் போலீஸ் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் இரவு வி.எம். சத்திரம் பி.எஸ்.என்.எல். நிறுவனம், பாளை கோர்ட்டு பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீஸ் கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் இரவு நெல்லை சந்திப்பு மற்றும் புதிய பஸ் நிலையம், ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில், வள்ளியூர், புளியங்குடி ஆகிய பகுதிகளில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் அனைத்து அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன.
இதே போல் நேற்று இரவும் 2-வது நாளாக கிராமங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பொது மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். ஒரு சில தனியார் பஸ், வேன்கள் மட்டுமே இயங்கின. இதில் முக்கிய ஊர்களுக்கு செல்ல பல மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டது.
நாகர்கோவில், மதுரை போன்ற இடங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டன. எனினும் பஸ்கள் சீராக இயக்கப்படவில்லை. இதனிடையே நெல்லை மாநகர் பகுதியில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க அரக்கோணத்தில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படை ஒரு பட்டாலியன் நேற்று இரவு நெல்லை வந்தது.

இந்த படையினர் நெல்லை மாநகர பகுதியில் இயல்பு நிலை திரும்பும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Blog Widget by LinkWithin